உடுமலை நகராட்சிக்கு சொந்தமான ரூ.1½ கோடி இடம் மீட்பு

Update: 2023-03-16 15:45 GMT


விற்பனை செய்ய முயன்ற உடுமலை நகராட்சிக்கு சொந்தமான ரூ.1½ கோடி மதிப்பிலான பொதுப்பயன்பாட்டு இடம் மீட்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு

உடுமலை நகராட்சியில் நகர் ஊரமைப்புத்துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு புதிய மனைப்பிரிவுகள் உருவாக்கப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் பூங்கா, நூலகம் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கென குறிப்பிட்ட அளவிலான இடம் ஒதுக்கப்படும்.

அவ்வாறு ஒதுக்கப்படும் இடங்களை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் இவ்வாறு ஒதுக்கப்பட்ட பொதுப்பயன்பாட்டு இடங்களை நகராட்சிக்கு ஒப்படைக்காமல் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். சில பகுதிகளில் இந்த இடங்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

தொடர் நடவடிக்கை

இதனையடுத்து இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

அதன்படி கல்யாணி அம்மாள் லே-அவுட், மகாலட்சுமி நகர், துரைசாமி மனைப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பிலிருந்த பொதுப்பயன்பாட்டு இடங்கள் மீட்கப்பட்டது.

இந்தநிலையில் உடுமலை திருப்பூர் சாலை அருகில் அர்பன் பாங்க் காலனியில் பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 10½ சென்ட் இடம் பூங்கா என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை நகராட்சியிடம் ஒப்படைக்காமல் விற்பனை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

ரூ.1½ கோடி இடம் மீட்பு

இதனையடுத்து ரூ.1½ கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு, அந்த இடத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தை பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகளும் நடைபெற்றது.

இதனால் பொதுமக்கள் இந்த இடத்தை வாங்கி ஏமாறாமல் இருக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் நகராட்சியால் மனைப்பிரிவில் ஒதுக்கப்பட்ட போது ஒதுக்கீட்டு இடங்கள் ஒப்படைக்காமல் உள்ளவற்றை கண்டறிந்து மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத்தலைவர் மு.மத்தீன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்