கற்பக விநாயகர்-மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-06-17 15:47 GMT


பொங்கலூர் தாயம்பாளையத்தில் உள்ள கற்பக விநாயகர்-மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மாகாளியம்மன் கோவில்

பொங்கலூர் அருகே தாயம்பாளையத்தில் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ புல்லாத்தாள் கோவில் உள்ளது. இந்த கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயாரானது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்காக யாக சாலைகள் அமைக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு கிராமசாந்தி பூஜையுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து 7 மணிக்கு தீர்த்தக்குடம் அழைத்தல், மாலை 4 மணிக்கு வாஸ்துசாந்தி, முதல்கால யாக வேள்விகள் ஆகியன நடைபெற்றது. வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மருதுறை குருக்கள்பாளையம் ஆதீனம் ஆலால சுந்தர பண்டித குரு சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் முன்னிலை வகித்தார். அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால யாக வேள்வி நடத்தப்பட்டு 5 மணிக்கு மேல் ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீமாகாளியம்மன் விமான கோபுர கும்பாபிஷேகமும், 6 மணிக்கு மேல் ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபுல்லாத்தாள் கோவில் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூல விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில் சிவாச்சாரியர்கள் ராஜகணபதி சிவாச்சாரியர், ஜெகதீசன் சிவாச்சாரியர், சிவ சுந்தர சந்தோஷ் சிவம் மற்றும் சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவில் சிவாச்சாரியர் கார்த்திகேய குருக்கள் ஆகியோர் முன்னின்று நடத்தினர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் ஏற்பாடு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் தாயம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்