சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
மாவட்டத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
மாவட்டத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், திருமஞ்சனம், இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் மகுடேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் உமா மகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி உற்சவ மூர்த்தியான நாகேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் நாகேஸ்வரர், அம்மன் ஆகியோர் அருள்பாலித்தனர்.
இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
கோபி
கோபி அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். முன்னதாக கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், தேன், எலுமிச்சை பழம் சாறு, சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதேபோல் கோபி மாதேசியப்பன் வீதியில் உள்ள மாதேஸ்வரர் கோவில், கோபி அருகே உள்ள கூகலூரில் மீனாட்சி அம்பிகா சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.