சேவூர் வாலீஸ்வரர்கோவிலில் நடராஜர் சிவகாமியம்மன் உற்சவருக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திர அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுக்கு முறை மட்டுமே நடராஜர் சிவகாமியம்மாளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்திலும், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திலும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திலும், ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வளர்பிறை சதுர்த்தி திதிகளில் மகாஅபிஷேகம் நடைபெற்று வருகிறது. சித்திரை மாத திருவோண நாளான நேற்று வாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட 32 வகையான திரவியங்களால் நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து செண்பகப்பூ, தாமரை மாலை, வில்வமாலைகளால் சாமி அலங்கரிக்கப்பட்டு மலர் அர்ச்சனை நடைபெற்றது. இதை தொடர்ந்து தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்ச புராண கூட்டு வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சேவூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.