தாளவாடி அருகே மாதேஸ்வரன் கோவிலில் குண்டம் விழா- பூசாரி மட்டும் தீ மிதித்தார்
தாளவாடி அருகே மாதேஸ்வரன் கோவிலில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் பூசாரி மட்டும் தீ மிதித்தார்.
தாளவாடி
தாளவாடி அருகே மாதேஸ்வரன் கோவிலில் குண்டம் விழா நடைபெற்றது. இதில் பூசாரி மட்டும் தீ மிதித்தார்.
மாதேஸ்வரன் கோவில்
தாளவாடி அடுத்துள்ள கோடிபுரம் கிராமத்தில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து மாதேஸ்வரன் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவு மேள தாளங்கள் முழங்க உற்சவர் குளக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதே நேரம் கோவில் முன்பு குண்டம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
அன்னதானம்
பின்னர் குளக்கரையில் இருந்து புறப்பட்ட சாமி ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்தது. காலை 7 மணி அளவில் பூசாரி மலர் தூவி பூஜை செய்துவிட்டு குண்டத்தில் இறங்கினார். அப்போது சுற்றி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோஷமிட்டார்கள்.
இந்த கோவிலில் பூசாரி மட்டுமே தீ மிதிக்க வேண்டும் என்பது ஐதீகம். அதனால் பூசாரி மட்டும் இறங்கினார். அவர் இறங்கி முடித்ததும் பக்தர்கள் குண்டத்தை தொட்டு வணங்கினார்கள். அதன்பின்னர் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.