கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா; விறகுகள் கொண்டுவந்து குவிப்பு

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) குண்டம் விழா நடக்கிறது. இதற்காக விறகுகள் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-01-11 21:08 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) குண்டம் விழா நடக்கிறது. இதற்காக விறகுகள் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளன.

பாரியூர் கொண்டத்து காளி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 வருடமாக பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். மேலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 29-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆண், பெண் பக்தர்கள் குண்டம் இறங்க விரதம் தொடங்கினார்கள்.

குண்டம் விழா

தொடர்ந்து சந்தன காப்பு உள்பட அம்மனுக்கு நாள்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தார்கள்.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணி அளவில் கோவிலில் பிரசித்தி பெற்ற குண்டம் விழா நடைபெறுகிறது. முன்னதாக கோவில் முன்பு 50 அடி நீளத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. இதற்காக நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே விறகுகள் கொண்டுவந்து குவித்திருந்தனர்.

தேர்த்திருவிழா

நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி அளவில் தேர்த்திருவிழாவும், நாளை மறுநாள் மலர் பல்லக்கும் நடைபெற உள்ளது. அன்று இரவு 11 மணி அளவில் மலர் பல்லக்கில் அம்மன் புறப்பட்டு கோபி பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுவார்.

15-ந் தேதி தெப்ப உற்சவமும், 16-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை மஞ்சள்நீர் உற்சவமும் நடக்கிறது. இதையடுத்து மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்