ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

Update: 2022-09-25 16:34 GMT

ராமேசுவரம், 

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மகாளய அமாவாசை

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமியை தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டின் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை முதல் மாலை வரையிலும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி தர்ப்பண பூஜைகள் மற்றும் சங்கல்ப பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

புனித நீர்

அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்காக கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து மேற்கு ரதவீதி மற்றும் கிழக்கு ரதவீதி சாலை வரையிலும் நீண்டவரிசையில் நின்று தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர். சாமியை தரிசனம் செய்ய கிழக்குவாசலின் அம்மன் சன்னதி வாசல் பகுதியில் இருந்து தெற்குகோபுர வாசல் வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கோவிலுக்குள் தரிசனம் செய்து வரும் வகையில் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் உள்ளிட்ட ஏராளமான திருக்கோவில் பணியாளர்கள் கோவிலின் உள்ளே பல்வேறு இடங்களில் போலீசாருடன் இணைந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தி பக்தர்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பாதுகாப்பு

பக்தர்களை கண்காணித்து கூட்ட நெரிசலை ஒழுங்கு படுத்தும் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க அரசு பஸ் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்கள் திட்டக்குடி சாலையில் மற்றும் மேற்குரத வீதி உள்ளிட்ட சாலை பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை.

வழிபாடு

நேற்று மகாளய அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடல், தேவிபட்டினம் நவபாஷாண கடலிலும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியில் தேவிபட்டினம் நவபாஷாண கோவில் செயல் அலுவலர் நாராயிணி, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்