கோவில் இடத்தில் அரசு கட்டிடம் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
கோவில் இடத்தில் அரசு கட்டிடம் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே அ. காளாப்பூர் கிராமத்தில் காரைக்குடி-திண்டுக்கல் நெடுஞ்சாலையை ஒட்டி காளாப்பூர் பெரிய பாலத்தின் அருகில் கொக்கன் கருப்பர் கோவில் உள்ளது. இந்த நிலையில் சிங்கம்புணரியில் பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்ட இடம் தேர்வு நடைபெற்றது. இதில் கொக்கன் கருப்பர் கோவில் இருக்கும் இடம் அருகே நீதிமன்றக் கட்டிடம் கட்ட சில நாட்களுக்கு முன்பு நில அளவிடும் பணி வருவாய்த்துறை மூலம் செய்யப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
இந்தநிலையில் நேற்று கொக்கன் கருப்பர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா கூறியதாவது:-100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கோவில்களை மத்திய தொல்லியல் துறை வழிகாட்டுதலின்படி பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. காளாப்பூர் கொக்கன் கருப்பர் கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு அரசு கட்டிடம் கட்ட முயற்சிப்பது மத உணர்வை தடுக்கும் செயலாகும். மக்கள் ஆன்மிக பணியை மேற்கொள்ள அரசாங்கம் உதவிகரமாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் எந்த ஒரு கட்டிடம் கட்டுவதை மாநில அரசு தவிர்க்க வேண்டும். இது குறித்து இந்த பகுதியை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் பேசி உள்ளேன். அவர் மாற்று இடம் பார்ப்போம் என கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.