கொட்டப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

திண்டுக்கல்லை அடுத்த கொட்டப்பட்டி முத்தாலம்மன் கோவில் உற்சவ விழா நடந்தது.

Update: 2022-09-05 19:29 GMT

உற்சவ விழா

திண்டுக்கல்லை அடுத்த கொட்டப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உற்சவ திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் ஆத்தூரில் இருந்து அம்மனின் ஆபரண பெட்டி அழைத்து வந்து சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் 4 நாட்கள் முத்தாலம்மனுக்கு மண்டகபடி பூஜைகள் நடைபெற்றன. விழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பொன்னர் சங்கர் கோவிலில் கிடா வெட்டி சாமி கும்பிடுதல் நிகழ்ச்சி நடந்தது.

அன்றையதினம் இரவு 10 மணிக்கு வடக்கு பாறைப்பட்டிக்கு சென்று அம்மனை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பின்னர் 10.30 மணிக்கு ஊர் பொதுச்சாவடியில் கண் திறப்பு வைபவம் நடந்தது.

வாணவேடிக்கை

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். அதையடுத்து மதியம் 12 மணிக்கு மேல் கழுமரம் ஏறுதல் மற்றும் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு மேல் கோவில் முன்பு உள்ள நாடகமேடையில் ஸ்ரீமுத்தாலம்மன் நாடகம் நடைபெற்றது.

மேலும் நள்ளிரவு 12 மணி அளவில் வாண வேடிக்கையும் நடத்தப்பட்டது. விழாவின் இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மண்டகபடி பூஜை, மாவிளக்கு எடுத்தலும், 11 மணிக்கு அம்மன் பூஞ்சோலைக்கு புறப்படுதலும், இரவு 9 மணிக்கு பகவதி அம்மன் கோவில் பின்புறம் உள்ள நாடகமேடையில் பவளக்கொடி நாடகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கொட்டப்பட்டி ஊர் பெரியதனம், ஊர் நாட்டாண்மை, ஊர் கவுண்டர் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்