கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை

சுசீந்திரம் அருகே மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாத வேதனையில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-26 20:36 GMT

மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாத வேதனையில் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொத்தனார்

சுசீந்திரம் அருகே உள்ள காக்கமூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பேச்சிநாத பிள்ளை (வயது58), கொத்தனார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், தாமோதரன் என்ற மகனும், ஈஸ்வரபிரியா(23) என்ற மகளும் உள்ளனர். பேச்சிநாதபிள்ளை மகள் ஈஸ்வரபிரியாவை திருமணம் செய்து கொடுக்க முடியவில்லையே என வீட்டில் அடிக்கடி கூறி புலம்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் பேச்சிநாதபிள்ளை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து பாதியில் திரும்பிய அவர் சுசீந்திரம் அருகே உள்ள பரப்புவிளை பகுதியில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அவரது உறவினர் தாணுமாலையன் என்பவர் பார்த்து இதுபற்றி நாகேஸ்வரிக்கு தெரிவித்தார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவ இடத்துக்கு வந்து கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலையில் பேச்சிநாதபிள்ளை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்