கோத்தகிரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், கோத்தகிரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-12-03 18:45 GMT

கோத்தகிரி, 

கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், கோத்தகிரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கல்லூரி மாணவர்

கோத்தகிரி அருகே கேர்பெட்டா எஸ்டேட் பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்பவரது மகன் அஜீத் (வயது 21). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு டெக்ஸ்டைல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இந்தநிலையில் அவர் கடந்த மாதம் 28-ந் தேதி கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாய் மற்றும் அண்ணன் அகுல், கல்லூரியில் கட்டணம் செலுத்துவதற்காக ஒரு வாரம் விடுமுறை எடுத்து வந்து உள்ளதாக தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அஜீத்தின் தாய், அகுல் 2 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் அஜீத் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக, அகுல் வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு அறையில் அஜீத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அஜீத்தை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தற்கொலை

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அஜீத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அகுல் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தவறான நன்னடத்தை காரணமாக கல்லூரி நிர்வாகம் ஒரு வாரம் அஜீத்தை இடைநீக்கம் செய்தது. இதனால் வீட்டில் விடுமுறை எடுத்து வந்ததாக பொய் கூறி உள்ளார்.

கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் மன உளைச்சல் அடைந்த அஜீத் வீட்டில் தனியாக இருந்த போது, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்