கோத்தகிரியில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் கோத்தகிரி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-05-01 18:45 GMT

கோத்தகிரி, 

கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால் கோத்தகிரி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கூடுதல் பஸ்கள்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் சனி, ஞாயிறு மற்றும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றவாறு இருந்தது. இந்தநிலையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டும், விடுமுறை முடிந்தும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரி பஸ் நிலையத்தற்கு வந்தனர். இதனால் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனால், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததாலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு பஸ்கள் வராததாலும் அவதியடைந்தனர்.

பயணிகள் அவதி

இதனால் பெரும்பாலான பயணிகள் பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் சதுக்கம் வரை நடந்து சென்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு வரும் அரசு பஸ்சில் ஏறி பஸ் நிலையத்திற்கு டிக்கெட் வாங்கினர். தொடர்ந்து அங்கு இறங்காமல் பஸ்சிலேயே அமர்ந்து மேட்டுப்பாளையத்திற்கு டிக்கெட் வாங்கி சென்றனர்.

இதனால் பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பஸ்சில் இடம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வெளியிடங்களுக்கு செல்லும் பயணிகள் வெகு நேரம் காத்திருந்தனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கோடை சீசன் முடியும் வரை வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சமவெளி பகுதிகளுக்கு கூடுதலாக அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்