கோத்தகிரி காட்டிமா அணி சாம்பியன்
நீலகிரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி காட்டிமா அணி சாம்பியன் பட்டம் வென்றது.;
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி காட்டிமா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதி போட்டி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஊட்டி மற்றும் கோத்தகிரியில் நடைபெற்று வந்தது. நாக் அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது. இதில் கிரிக்கெட் சங்கத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் பிரிவில் பதிவு செய்துள்ள 21 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகளில் வெற்றி பெற்ற கோத்தகிரி காட்டிமா அணியும், கூடலூர் ரைசிங் ஸ்டார் அணியும் இறுதி போட்டிக்குள் நுழைந்தன.
இந்தநிலையில் நேற்று கோத்தகிரி காந்தி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கூடலூர் ரைசிங் ஸ்டார் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் ஹாரிஸ் 24 ரன்கள் எடுத்தார். கோத்தகிரி காட்டிமா அணியின் பந்து வீச்சாளர்கள் ஆனந்தராஜ், செந்தில்குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பரிசு கோப்பை
இதைத்தொடர்ந்து 120 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோத்தகிரி காட்டிமா அணி களமிறங்கியது. அந்த அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த அணி வீரர்கள் மதன் 47 ரன்கள் (அவுட் இல்லை), சுதாகர் 42 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் கோத்தகிரி காட்டிமா அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
அந்த அணிக்கு நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜெயபிரகாஷ், துணை செயலாளர் குருபிரசாத், கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி ஆகியோர் பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.