கோத்தகிரியில் மாவட்ட கைப்பந்து இறுதிப்போட்டி: சல்மான் பிரதர்ஸ் அணி சாம்பியன்
கோத்தகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து இறுதிப்போட்டியில் சல்மான் பிரதர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
கோத்தகிரி
கோத்தகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து இறுதிப்போட்டியில் சல்மான் பிரதர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
மாவட்ட அளவிலான போட்டி
கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டத்தில் கே.பி.என் கிங்ஸ் கைப்பந்து குழு, சிக்ஸ் பிரண்ட்ஸ் கைப்பந்து குழு, நேரு யுவகேந்திரா, மக்கள் வழிகாட்டி இயக்க விளையாட்டுக் குழு ஆகியவை இணைந்து நடத்திய தோட்டா ராஜேந்திரன் நினைவுக் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தலைசிறந்த 35 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டன. நாக் அவுட் மற்றும் லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கீழ் கோத்தகிரி சல்மான் பிரதர்ஸ் அணி மற்றும் சோலூர்மட்டம் சிக்ஸ் கில்லர்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.
இறுதி போட்டி
இதனைத் தொடர்ந்து இரவு நேர மின்னொளியில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் சல்மான் பிரதர்ஸ் அணி (25 - 23), (25- 21) என்ற நேர் செட்களில் சிக்ஸ் கில்லர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தேனாடு ஊராட்சி தலைவர் ஆல்வின், கெங்கரை ஊராட்சி தலைவர் முருகன், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் சத்திய சீலன், மக்கள் வழிகாட்டி இயக்க விளையாட்டுக் குழு தலைவர் முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்ற சல்மான் பிரதர்ஸ் அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் பரிசு கேடயம், 2-ம் இடம் பிடித்த சிக்ஸ் கில்லர்ஸ் அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு கேடயம், 3-ம் இடம் பிடித்த ஆல்வின் பிரதர்ஸ் அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் பரிசு கேடயம், 4-ம் இடம்பிடித்த சிக்ஸ் பிரதர்ஸ் அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் பரிசு கேடயத்தை வழங்கினர்.