கோரம்பள்ளம் குளம் வடிகால்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
பருவமழை தொடங்குவதற்கு முன்பு கோரம்பள்ளம் குளம் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்பிக்நகர்:
பருவமழை தொடங்குவதற்கு முன்பு கோரம்பள்ளம் குளம் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் சங்க கூட்டம்
தூத்துக்குடியில் தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் குளம் மடை எண்-2, நீரினை பயன்படுத்துவோர் சங்கம், முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி கிராம விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டம் அத்திமரப்பட்டியில் உள்ள விவசாய சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் திருமால் தலைமை தாங்கினார். செயலாளர் ரகுபதி பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினர்.
வடிகால்களை சீரமைக்க வேண்டும்
இதை தொடர்ந்து, மழை காலத்திற்கு முன்பு குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய பகுதிகளில் மழைநீர் தேங்காமல் செல்ல கோரம்பள்ளம் குளம் வடிகால்களை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரிடம் விவசாய சங்க கூட்ட தீர்மானம் குறித்து விஜயகுமார் கொடுத்த கோரிக்கை மனுவில்,
சீமைகருவேல மரங்கள்
கோரம்பள்ளம் குளத்தில் இருந்து மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் கடல் வரை சென்று கலக்கும் விவசாய கழிவுநீர் வடிகால், தற்போது மாநகராட்சி வடிகாலாக மாறியுள்ளது. அந்த வடிகால் ஆக்கிரமிப்புகளாலும், கட்டுமான பணியின் திட்டத் கழிவுகளாலும் இதரகுப்பைகளாலும் புதர்மண்டி கிடக்கிறது. மேலும் விவசாய நிலங்களில் உள்ள உறை கிணறுகளில் கழிவுநீர் கலந்து உள்ளது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய்கள், வடிகாலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் கழிவுநீர் செல்ல தடையாக இருந்து வருகிறது. மேலும் வடிகால் முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இந்த வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள், மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.