கொப்பரை தேங்காய் விலை தொடர்ந்து உயருமா?

Update: 2022-11-10 16:37 GMT


கொப்பரை தேங்காய் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில் தொடர்ந்து உயருமா? என உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கொப்பரை உற்பத்தி

உடுமலை, குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. உடுமலை பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கொப்பரை தேங்காய் உற்பத்தி களங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கொப்பரை தேங்காய்கள் காங்கேயம் வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.82 முதல் ரூ.84 வரை விற்பனை ஆகிறது. இதனால் கொப்பரை உற்பத்தியாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

விலை உயர்வு

இது குறித்து கொப்பரை உற்பத்தியாளர்கள் கூறியதாவது உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்துடன் இணைந்து தொழிலாக கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. தேங்காய் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு டன் தேங்காய் முதல் தரம் ரூ.24 ஆயிரம், இரண்டாம் தரம் ரூ.22 ஆயிரமாக உள்ளது. தரமான 100 தேங்காய்களிலிருந்து அதிகபட்சமாக 16 கிலோ வரை கொப்பரை உற்பத்தி செய்ய முடியும் உடுமலை மற்றும் குடிமங்கலம் பகுதிகளில் 12 முதல் 13 கிலோ வரை மட்டுமே கொப்பரை கிடைக்கிறது. தேங்காய்பறி கூலி, உரித்து வெயிலில் உலர வைப்பதற்கான கூலி அதிகரித்துள்ள நிலையில் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வந்தது. கடந்த மாதம் ஒரு கிலோ கொப்பரை ரூ.74வரை விற்பனையான நிலையில் தற்போது கிலோவிற்கு 10 ரூபாய் அதிகரித்து உள்ளது.கொப்பரை தேங்காய் மேலும் விலை உயருமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்