நாய்களின் கடியில் இருந்து காப்பாற்றி ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட கொக்கிலமேடு மீனவர்கள்
நாய்களின் கடியில் இருந்து காப்பாற்றி ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட கொக்கிலமேடு மீனவர்களின் செயல் அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கொக்கிலமேடு மீனவர் குப்பத்தில் கடந்த சில வாரங்களாக ஏராளமான கடல் ஆமைகள் கரைப்பகுதிக்கு வந்து குழிதோண்டி முட்டைபோட்டு விட்டு சென்றன. முட்டை போட்டுவிட்டு செல்வதோடு சரி, இந்த கடல் ஆமைகள் மீண்டும் கரை பகுதிக்கு திரும்பி வராது. இந்த நிலையில் ஆமைகள் போட்டுவிட்டு சென்ற முட்டையில் இருந்து இரவு நேரத்தில் மட்டும்தான் தானாக பொரித்து ஆமை குஞ்சுகள் வெளிவருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் முட்டையில் இருந்து பொரித்து வெளிவந்த 30-க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை நாய்கள் கடித்து துன்புறுத்தின.
இதை பார்த்த அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் நாய்களை துரத்திவிட்டு ஆமை குஞ்சுகளை பத்திரமாக மீட்டு கடலில் விட்டனர். மெதுவாக ஊர்ந்து சென்ற ஆமை குஞ்சுகள், நாய்க்கடிக்கு ஆளாகாமல் அதன் பிடியில் இருந்து தப்பித்து கடல் அலையில் ஜாலியாக நீந்தி உயிர் தப்பித்து கடலுக்கு சென்றுவிட்டன. ஆமை குஞ்சுகளை காப்பாற்றி கடலில் விட்ட மீனவர்களின் செயல் அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.