கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலா தலமாக்கும் திட்டம்
கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலா தலமாக்கும் திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலா தலமாக்கும் திட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கொடியம்பாளையம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடற்கரை கிராமங்களான பழையாறு, கோட்டைமேடு, கொடியம்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் வங்கக்கடலோரம் அமைந்துள்ளன. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ளனர்.
இப்பகுதியில் இயற்கை மீன் பிடித்துறைமுகம் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆறு கொடியம்பாளையம் மற்றும் பழையாறு கடற்கரைக்கு இடைப்பட்ட முகத்துவார பகுதியில் வங்கக்கடலோடு கலக்கிறது.
அலையாத்திக்காடு
கொள்ளிடம் ஆறு கலக்கும் பகுதி அருகே திட்டுப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒரு திட்டுப்பகுதிதான் கொடியம்பாளையம் தீவு கடற்கரை கிராமம் ஆகும். இந்த கிராமம் ஒருபக்கம் வங்கக்கடல், மறுபக்கம் கொள்ளிடம் ஆறு என நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் அலையாத்திக்காடு பசுமை நிறைந்து காணப்படுகிறது.
இயற்கை அழகு
சுற்றுலாத்தலமாக இருந்து வரும் பிச்சாவரம் அலையாத்தி காடு, கொடியம்பாளையம், கோட்டைமேடு, பழையாறு உள்ளிட்ட கிராமங்கள் வரை நீண்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் படகு மூலம் வந்து இப்பகுதியின் இயற்கை அழகை ரசித்து பார்க்கிறார்கள்.
கொடியம்பாளையம் தீவு கிராமம் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் சோழ மன்னரின் சாம்ராஜ்யம் சரிந்து போனதற்கான அடையாளங்கள் எஞ்சி உள்ளன. இந்த நிலையில் கொடியம்பாளையம்் தீவு கிராமத்தை சுற்றுலா தலமாக்கும் திட்டம் குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அரவிந்த்குமார் தலைமையிலான சுற்றுலாத்துறை அதிகாரிகள் கொடியம்பாளையம் மற்றும் கோட்டைமேடு ஆகிய தீவு கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
சுற்றுலா வசதிகள்
அப்போது அங்கு உள்ள மணற்பாங்கான கடற்கரை, படகு குழாம், காத்திருப்போர் கட்டிடம், சாலை வசதிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட சுற்றுலா வசதிகள் அமைப்பது தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
அப்போது ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய கவுன்சிலர் அங்குதன், ஊராட்சி தலைவர் காமராஜ், சுற்றுலா அலுவலர் பாலமுரளி, வருவாய் ஆய்வாளர் மருதுபாண்டியன், கிராம நிர்வாக அலுவலர்கள் பவளச்சந்திரன், அன்பரசன், செல்லத்துரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கெள்ளிடம் ஆற்றில் உள்ள தீவு கிராமங்களை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் பணி விரைவில் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.