கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு:சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2023-02-21 20:43 GMT

சேலம், .

கோடநாடு வழக்கு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பங்களா நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ளது. அங்கு வேலை செய்து வந்த காவலாளி ஓம்பகதூர் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். மேலும், எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுபற்றி கோடநாடு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவரான சேலம் மாவட்டம் சித்திரைபாளையத்தை சேர்ந்த கனகராஜ், ஆத்தூரில் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் மர்மமான முறையில் வாகன விபத்தில் இறந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

இதற்கிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

3 மாதத்தில் வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என உயர் அதிகாரிகள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி தற்போது 2 மாதங்கள் முடிந்து விட்டது.

இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே கனகராஜ் விபத்தில் சிக்கிய பகுதியான ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை சந்தனகிரி பிரிவு ரோடு பகுதியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரித்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சேலம் சூரமங்கலத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் உயர் அதிகாரிகள்

இது ஒருபுறம் இருக்க, கனகராஜ் விபத்தில் சிக்கிய போது சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த போலீஸ் உயர் அதிகாரிகளை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்கை முடிக்க உள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்