கே.கே.நகரில் பட்டப்பகலில் துணிகரம்: திறந்து கிடந்த வீட்டில் புகுந்து 65 பவுன் நகைகள் கொள்ளை
சென்னை கே.கே.நகரில் பட்டப்பகலில் திறந்து கிடந்த வீட்டில் புகுந்து மர பீரோவை உடைத்து 65 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அசோக்நகர், 90-வது தெருவைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 55). இவர் அசோக்நகர், காமராஜர் சாலையில் சலூன் கடை வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல சம்பத், தனது மகனுடன் சென்று சலூன் கடையை திறந்தார். சம்பத்தின் மனைவி ஆனந்தி, காலை 7½ மணி அளவில் வீட்டு கதவை பூட்டாமல் லேசாக சாத்தி விட்டு, அருகில் உள்ள கடைக்கு போனார். மீன் மற்றும் பால் வாங்கி விட்டு, ஆனந்தி காலை 8½ மணி அளவில் வீடு திரும்பினார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டில் உள்ள அறை ஒன்றில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு, துணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த சுமார் 65 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்து, யாரோ மர்ம நபர்கள் பட்டப்பகலில் கைவரிசை காட்டி விட்டனர்.
கொள்ளை போன வீட்டு படுக்கை அறையில் சம்பத்தின் மகள் கீதா, பாட்டி பாப்பா ஆகியோர் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். இதனால்தான் மனைவி ஆனந்தி கதவை பூட்டாமல் திறந்து போட்டு சென்றுள்ளார். ஓசை இல்லாமல் வீட்டுக்குள் புகுந்து, பீரோவை உடைத்து, துணிச்சலாக கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களை கே.கே.நகர் போலீசார் தேடி வருகிறார்கள்.
கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. கொள்ளையர்களை பிடிக்க உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளை போன வீட்டின் மேல்மாடியில் டீக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வாடகைக்கு தங்கி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.