கிடா வெட்டி வினோத வழிபாடு

எஸ்.மேட்டுப்பாளையம் கனகதண்டி மகா மாரியம்மன் கோவிலில் கிடா வெட்டி வினோத வழிபாடு

Update: 2023-06-04 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கனகதண்டி மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு கனகதண்டி அம்மன் கோவில் வாயிலில் போலரக்கா பாட்டுப்பாடி கிடா ஆட்டினை உடுக்கை அடித்து உறங்க வைத்தனர். கிடா உறங்கியபின் அதன் மீது தண்ணீர் தெளித்து வெட்டி குடலை உருவி ஊதி, 10 நாட்கள் விரதமிருந்த நபர், மாலையாக கழுத்தில் அணிந்துகொண்டு ஊர் எல்லைகளை சுற்றி வந்தார். அப்போது ஒவ்வொரு எல்லைப்பகுதிகளிலும் ஆட்டு கிடா குடலை புதைத்துவிட்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மறுநாளே மழை பெய்யும் என்ற ஐதீகம் இருந்து வருகிற நிலையில் இந்த வினோத வழிபாட்டை காண அருகிலுள்ள கிராமங்களான பரசுரெட்டிப்பாளையம், கொங்கம்பட்டு, குமாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வெட்டப்படும் ஆட்டின் ரத்த சோற்றை பருகினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மடியேந்தி ரத்த சாப்பாட்டை வாங்கிச்சென்றனர். இவ்விழாவை முன்னிட்டு 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்