தொழிலாளியை கொன்று கால்வாயில் உடல் வீச்சு

கோவை அருகே கட்டிட தொழிலாளியை கொன்று கால்வாயில் உடல் வீசப்பட்டது. இது தொடர்பாக அவரது நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-07-03 21:45 GMT

சூலூர்

கோவை அருகே கட்டிட தொழிலாளியை கொன்று கால்வாயில் உடல் வீசப்பட்டது. இது தொடர்பாக அவரது நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கட்டிட தொழிலாளி

திருவாரூரை சேர்ந்தவர் ரவி(வயது 60). இவரது மகன் விஜயராகவன்(வயது 32). இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து, கோவையில் உள்ள செங்கத்துறை பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்து, கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடன், அவரது தந்தை ரவி, நண்பர் ஸ்டாலின்(45) மற்றும் சில நண்பர்கள் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயராகவன், அவரது தந்தை ரவி மற்றும் ஸ்டாலின் உள்பட நண்பர்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தனர். பின்னர் அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அங்கிருந்து ரவி மட்டும் அறைக்கு சென்றுவிட்டார்.

அடித்துக்கொலை

இதற்கிடையில் ஓட்டலில் இருந்து குடிபோதையில் வெளியே வந்த விஜயராகவனுக்கும், ஸ்டாலின் உள்பட அவரது நண்பர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்டையால் விஜயராகவனின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த விஜயராகவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் வீசி, அதன் மீது பலகையை போட்டு மூடிவிட்டு அவர்கள் தப்பி சென்றார்.

ரத்தக்கறை

இதையடுத்து நேற்று காலையில் வழக்கம்போல் ஓட்டலை திறக்க வந்த ஊழியர்கள், கடையின் முன் தரையில் ரத்தக்கறை படிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதனருகில் உள்ள கால்வாயில் ஒருவரது கால் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது. உடனே கால்வாய் மீது கிடந்த பலகையை அகற்றி பார்த்தனர். அப்போது கால்வாய்க்குள் ஒருவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் சூலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

நண்பரிடம் விசாரணை

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் விஜயராகவனை, அவரது நண்பர்களே அடித்து கொன்று சாக்கடையில் கால்வாயில் உடலை வீசி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக ஸ்டாலினை போலீசார் பிடித்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மற்ற நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்