மூதாட்டியை கொன்று பலாத்காரம்; டிரைவருக்கு சாகும் வரை சிறை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு

மூதாட்டியை கொன்று பலாத்காரம் செய்த டிரைவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-11-30 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் காலனி புதுமனை தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் கவிதாஸ் (வயது 26), பொக்லைன் எந்திர டிரைவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆலங்குப்பம் ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாய் புதைப்பதற்கான பணிக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 17.2.2019 அன்று இரவு கவிதாஸ், தனது பணியை முடித்துவிட்டு, அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் அதே கிராமத்தை சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவர், அவரது வீட்டிற்குள் தனியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இதை பார்த்த கவிதாஸ், அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு அவர் உடன்படாததால் ஆத்திரமடைந்த கவிதாஸ், தான் வைத்திருந்த பேனா கத்தியால் அந்த மூதாட்டியின் கழுத்தில் குத்திக்கொலை செய்தார். பின்னர் மூதாட்டியை அவர் பலாத்காரம் செய்தார்.

அந்த சமயத்தில் மூதாட்டியின் வீட்டில் மின்விளக்கு எரிவதை பார்த்த உறவினர்கள் அங்கு வந்தபோது கவிதாஸ் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

வாலிபருக்கு சாகும் வரை சிறை

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாசை கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி (பொறுப்பு) சாந்தி நேற்று தீர்ப்பு அளித்தார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட கவிதாசுக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் பரபரப்பான தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட கவிதாஸ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்