இளம்பெண்ணை கொன்று மூடையில் கட்டி வைக்கோல் படப்பில் வீச்சு:பக்கத்து வீட்டுப்பெண்- கள்ளக்காதலனுக்கு சிறை- மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு

நகைக்காக இளம் பெண்ணை கொலை செய்து பிணத்தை சாக்கு மூடையில் கட்டி வைக்கோல் படப்பில் வைத்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கும், அவருடைய கள்ளக்காதலனுக்கும் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update: 2023-08-08 00:33 GMT


நகைக்காக இளம் பெண்ணை கொலை செய்து பிணத்தை சாக்கு மூடையில் கட்டி வைக்கோல் படப்பில் வைத்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கும், அவருடைய கள்ளக்காதலனுக்கும் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சாக்கு மூடையில் பிணம்

மதுரை திருப்பரங்குன்றம் ஆஸ்டின்பட்டியை அடுத்த உச்சப்பட்டியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் ராஜலட்சுமி (வயது 21). இவர் கடந்த 2016-ம் ஆண்டில் ஆடுகளுக்கு இரை வைக்க சென்றவர் திடீரென மாயமானார்.

இதுகுறித்து அவரது தந்தை ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், பொன்ராஜின் வீட்டுக்கு பின்பு இருந்த வைக்கோல் படப்புக்குள் கிடந்த சாக்கு மூடையில் ராஜலட்சுமி பிணமாக மீட்கப்பட்டார். இது சம்பந்தமாக போலீசார் விசாரித்தனர்.

அப்போது, பொன்ராஜ் வீட்டுக்கு அருகில் வசித்த சாந்தியும், அவரது கள்ளக்காதலனான அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரும்தான் ராஜலட்சுமிைய கொலை செய்தது தெரிந்தது.

அதாவது, சரவணன், சாந்தியிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். தன்னிடம் பணம் இல்லாததால், ராஜலட்சுமி அணிந்திருந்த நகையை பறிக்க சாந்தி திட்டமிட்டார்.

நகைக்காக கொலை

அதன்படி சம்பவத்தன்று துணி தைப்பதற்கு தன் வீட்டுக்கு வருமாறு ராஜலட்சுமியை அழைத்துள்ளார்.

அங்கு சென்ற ராஜலட்சுமியை சாந்தியும், சரவணனும் சேர்ந்து கட்டையால் தாக்கி, கொலை செய்தனர். பின்னர் ராஜலட்சுமி அணிந்து இருந்த தங்கச் சங்கிலி, தோடு, கொலுசு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பிணத்தை சாக்கு மூடையில் கட்டி வைக்கோல் படப்புக்குள் வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் கருணாநிதி ஆஜரானார்.

ஆயுள் தண்டனை

விசாரணை முடிவில், அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான சாந்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சரவணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்