பெண்ணை கொன்று சுடுகாட்டில் புதைத்த வழக்கில் தந்தையுடன் என்ஜினீயர் கைது

சங்கராபுரம் அருகே பெண்ணை கொன்று சுடுகாட்டில் புதைத்த வழக்கில் தந்தையுடன் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-27 18:55 GMT

மூங்கில்துறைப்பட்டு, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் உள்ள சுடுகாட்டில் சம்பவத்தன்று பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்ததற்கான அடையாளம் காணப்பட்டது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், யாரையோ கொன்று அங்கு புதைத்திருப்பதாக கருதி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் சந்தேகத்துக்குரிய இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அதில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, அதற்குள் 55 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் இருந்தது. தொடர்ந்து அந்த பெண்ணின்உடலை டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே பிரேதபரிசோதனை செய்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து மீண்டும் அதே பள்ளத்தில் அந்த பெண்ணின் உடல் புதைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பெண் யார்?. அவரை கொலை செய்து புதைத்தது யார்? என்பது பற்றி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர் விரியூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மனைவி ஆண்டாள் (வயது 55) என்பது தெரிந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் தாஸ், மனோகர், முருகன், தலைமை காவலர் சுரேஷ், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சைபர் கிரைம் சிவராமன், பழனிச்சாமி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் சங்கராபுரம் அருகே விரியூர் கிராமத்தை சேர்ந்த வீராசாமி (60) இவரது மகன் விக்னேஷ் (வயது 26) என்ஜினீயர். இவர்கள் இருவரும் ஆண்டாள் கொலை வழக்கு தொடர்பாக நேற்று கிராம நிர்வாக அலுவலர் ரவியிடம் சரணடைந்தனர்.

வாக்குமூலம்

பின்னர் அவர்களை போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசாரிடம் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதன் விவரம் வருமாறு:- ஆண்டாளின் மகள் தனலட்சுமி மொத்த அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.

அதில் அவரிடம் அரிசி வாங்கி வியாபாரம் செய்வதற்காக ரூ.15 லட்சத்தை வீராசாமி கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆன பின்பும் தனலட்சுமி அரிசி வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு தனலட்சுமியிடம் வீராசாமி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனலட்சுமியை தேடி அவரது வீட்டிற்கு வீராசாமியும், அவரது மகன் விக்னேசும் சென்றனர். ஆனால் அங்கு தனலட்சுமி இல்லை. இதையடுத்து அங்கிருந்த ஆண்டாளிடம், உனது மகள் எங்களுடைய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே நீ எங்களது வீட்டுக்கு வா. அப்படி வந்தால், உன்னை தேடி உனது மகள் எனது விட்டுக்கு வருவாள்.

கழுத்தை நெரித்து கொலை

அப்போது அவளிடம் எங்களுடைய பணத்தை வாங்கி கொள்கிறோம் என கூறி ஆண்டாளை வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். இருப்பினும் ஆண்டாளை தேடி தனலட்சுமி செல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வீராசாமி, விக்னேஷ் இருவரும் சேர்ந்து ஆண்டாளை தாக்கியதோடு, சேலையால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் கொலையை மறைக்க ஆண்டாளின் உடலை சாக்குமூட்டையில் கட்டி மோட்டார் சைக்கிளில் புதூர் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழிதோண்டி ஆண்டாளின் உடலை புதைத்து விட்டு அவர்கள் சென்றனர்.

இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்ததால், எப்படியும் போலீசில் சிக்கி கொள்வோம் என்ற அச்சத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் அவர்கள் சரண் அடைந்தனர். இதையடுத்து தந்தை-மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்