வீடு புகுந்து கல்லூரி மாணவி கடத்தல்

வீடு புகுந்து கல்லூரி மாணவி கடத்தல்

Update: 2023-08-14 18:45 GMT

கோவை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடு புகுந்து கல்லூரி மாணவியை கடத்திச்சென்ற வாலிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபருடன் காதல்

கோவை அய்யண்ண கவுடர் வீதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், அதேப்பகுதியில் சூப் கடை நடத்தி வரும் ஷாருக் (வயது 23) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இதனால் 2 பேரும் அடிக்கடி பேசி வந்தனர்.

இதையடுத்து அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இது அந்த மாணவி வீட்டில் தெரியவந்தது. எனவே அந்த மாணவி வீட்டில் அவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இனிமேல் ஷாரூக்கிடம் பேசக்கூடாது என்றும் கூறினார்கள்.

வீடு புகுந்து கடத்தல்

இருந்தபோதிலும் அந்த மாணவியால் தனது காதலனை மறக்க முடியவில்லை. இதையடுத்து அவர் தனது காதலனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, நமது காதல் பெற்றோருக்கு தெரிந்து விட்டது என்றும், அதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், வீட்டுக்கு வந்து என்னை அழைத்துச்செல்லுங்கள் என்றும் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஷாரூக் தனது நண்பர்களான மிஷால், ரிஸ்வான் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவில் தனது காதலி வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் காதலியின் வீட்டில் இருந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவர்களை தாக்கிவிட்டு தனது காதலியை கடத்திச்சென்றதாக தெரிகிறது.

போலீசார் விசாரணை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ஷாருக், மிஷால், ரிஸ்வான் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கிரிக்கெட் விளையாடிய போது 3 பேரும் சேர்ந்து மற்றொரு அணியை சேர்ந்த 2 பேரை தாக்கியதாக ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாருக் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்