ரூ.7 லட்சம் கேட்டு கோவில் பூசாரி காரில் கடத்தல்

கோவில்பட்டி அருகே ரூ.7 லட்சம் கேட்டு கோவில் பூசாரி காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-04 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே ரூ.7 லட்சம் கேட்டு கோவில் பூசாரி காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவில் பூசாரி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள இளஞ்செம்பூரைச் சேர்ந்தவர் உமையலிங்கம் (வயது 34). இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மனைவி மனிஷாவுடன் வசித்து வருகிறார்.

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் தென்றல் நகரில் உள்ள சாய்லிங்கம் கோவிலில் உமையலிங்கம் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவில் கோவிலில் பூஜையை முடித்து விட்டு, உமையலிங்கம், தனது நண்பர் கோமதிராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

காரில் கடத்தல்

அப்போது அவர்களை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று உமையலிங்கம் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அந்த சமயத்தில் அங்கு கார் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய 4 பேர், ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என 6 பேர் சேர்ந்து உமையலிங்கம், கோமதிராஜை சரமாரியாக தாக்கினார்கள்.

பின்னர் கோமதிராஜை விரட்டி விட்டு, உமையலிங்கத்தின் கை, கால்களை கட்டி காரின் பின் இருக்கையில் வைத்து கடத்திச் சென்றனர்.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து உமையலிங்கத்தின் மனைவி மனிஷாவிடம், கோமதிராஜ் தெரிவித்தார். இதையடுத்து மனிஷா, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆலோசனையின் பேரில், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் மேற்கு இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் மற்றும் போலீசார் பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கார் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியபோது, கார் சாத்தூர் அருகே நிற்பது தெரியவந்தது.

ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டல்

இதற்கிடையே உமையலிங்கத்தின் மனைவி மனிஷாவிற்கு போன் செய்த மர்மநபர்கள் ரூ.7 லட்சம் தந்தால் தான், உனது கணவரை விடுவிப்போம் என்று மிரட்டினார்கள்.

இதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி மனிஷா அந்த மர்மநபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் தருவதாக கூறியதுடன், அவர்கள் ராஜபாளையத்துக்கு வரும்படி தெரிவித்தனர். அவரும், கோமதிராஜூம் ராஜபாளையத்துக்கு சென்றனர். அங்கு பஜாரில் கார் வந்து நின்றதும் மறைந்திருந்த போலீசார் காரை சுற்றி வளைக்க முயன்றனர். இதனை பார்த்த காரில் இருந்து 6 பேர் தப்பி ஓடிவிட்டனர். கார் டிரைவர் மட்டும் சிக்கினார்.

உடனடியாக காரில் இருந்த பூசாரி உமையலிங்கத்தை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

கார் டிரைவர் கைது

கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிவகாசி மில் காலனியை சேர்ந்த செந்தில் மகன் மனோகர் (24) என்பது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 6 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். கோவில் பூசாரி எதற்காக கடத்தப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் பாண்டவர்மங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்