லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடியில் லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-14 18:45 GMT

தூத்துக்குடியில் லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட 3¼ டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகன தணிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, சென்னை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு துறை ஐ.ஜி அபாஷகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மற்றும் போலீசார் தூத்துக்குடி அண்ணாநகர் 2-வது தெரு பத்திரகாளியம்மன் கோவில் முன்பு நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

பறிமுதல்

அப்போது அங்கு வந்த ஒரு லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை சோதனை செய்த போது, தலா 40 கிலோ வீதம் 80 மூட்டைகளில் 3 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவர் அண்ணாநகர் 12-வது தெருவை சேர்ந்த பொன்ராஜ் மகன் இசக்கிவேல் (வயது 48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அண்ணாநகரை சேர்ந்த அஜித் என்பவருடன் சேர்ந்து ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அஜித்தை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்