மாணவியை கடத்தி சென்று திருமணம்; டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
அரியலூரில் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.;
மாணவி கடத்தல்
அரியலூர் மாவட்டம், கல்லமேடு கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 21). டிரைவரான இவரும், அதே ஊரை சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் காதலித்து வந்துள்ளனர். மாணவியின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வரவே மாணவிக்கு திருமண ஏற்பாடு செய்ய முன்வந்துள்ளனர். இதனை மாணவி அஜித்திடம் கூறவே, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி மாணவியை கடத்தி சென்று அயன் ஆத்தூருக்கும் ஆனந்தவாடிக்கும் இடையில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து அஜித் திருமணம் செய்துள்ளார். பின்னர் அருகில் உள்ள காட்டில் 3 நாட்கள் தங்கி இருந்தபோது உடலுறவும் கொண்டுள்ளார். இந்த நிலையில் இரவில் தூங்கிய மாணவியை காணவில்லை என பல இடங்களில் தேடிய மாணவியின் பெற்றோர் அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
20 ஆண்டுகள் சிறை
புகாரின் பேரில் அஜித்தை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கானது அரியலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், மாணவியை கடத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், குழந்தை திருமண வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து இதனை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதால் இதில் கூடுதல் தண்டனையான 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அஜித் அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அஜித் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.