கிடா முட்டு சண்டை; ஆக்ரோஷமாக மோதிய ஆடுகள்

திண்டுக்கல் அருகே நடந்த கிடா முட்டு சண்டையில் ஆடுகள் ஆக்ரோஷமாக மோதி பார்வையாளர்களை கவர்ந்தன.

Update: 2022-05-29 01:56 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் கிடா முட்டு நண்பர்கள் குழு சார்பில், திண்டுக்கல் அருகே உள்ள குட்டியபட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கிடா முட்டு சண்டை நடைபெற்றது.

திண்டுக்கல், திருச்சி, மதுரை, சென்னை, தேனி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாட்டுக்கிடாக்கள், குரும்ப, கோங்கு வகை கிடாக்கள் என மொத்தம் 260 கிடாக்கள் பங்கேற்றன.

களத்தில் மோத விடப்பட்ட கிடாக்கள் அனைத்தும் ஆக்ரோஷமாக மோதின. முறுக்கு கொம்புகளை கொண்ட கிடாக்கள் முட்டியபோது எழுந்த சத்தம், சுவற்றில் கனரக வாகனம் மோதினால் எப்படி இருக்குமோ அப்படி பயங்கரமாக இருந்தது.

கிடா முட்டு சண்டையை பார்ப்பதற்கு ஏராளமானோர் திரண்டனர். எத்தனை முறை மோதினாலும் தளர்வடையாமல் சில கிடாக்கள், களத்தில் கம்பீரமாக நின்று பார்வையாளர்களை கவர்ந்தது.

2 கிடாக்கள் மோதும் போது தலையில் 75 முறை முட்ட வேண்டும். அப்போது வலி தாங்க முடியாமல் இரண்டில் ஏதாவது ஒரு கிடா ஓடிவிட்டால் மற்றொரு கிடா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் 2 கிடாக்களும் தலா 75 முறை தலையில் முட்டினால், அவை சமநிலை அடைந்ததாக கருதப்பட்டது. அதன்படி வெற்றி பெற்ற 130 கிடாக்களுக்கு 1 கிராம் தங்க நாணயமும், சமநிலையை அடைந்த 130 கிடாக்களுக்கு ½ கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்