பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கேரள வாலிபர் கைது
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகர் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி பார்வதி. சம்பவத்தன்று இரவு இவர் வண்ணார்பேட்டையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் பார்வதி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார். ஆனால் உஷார் அடைந்த பார்வதி சங்கிலியை பறிக்க விடாமல் பிடித்தார். அப்போது அந்த சங்கிலி அறுந்து சாலையில் விழுந்தது. இவரது சத்தம் கேட்டு பொது மக்கள் திரண்டதால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று விட்டார்.
இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, அந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அந்த மர்ம நபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபரான ரித்திக் (வயது 22) என்பதும், பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த போது, செலவுக்கு பணம் இல்லாமல் சங்கிலி பறிப்பு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து ரித்திக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.