விலை அதிகரிப்பு எதிரொலி:பெட்ரோல்-டீசல் நிரப்ப குமரி எல்லைக்கு படையெடுக்கும் கேரள வாகனஓட்டிகள்

கேரளாவில் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக வாகன ஓட்டிகள் குமரி எல்லைக்கு வந்து பெட்ரோல்-டீசல் நிரப்பி செல்கிறார்ள். பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.4 லாபம் கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-02-13 21:12 GMT

களியக்காவிளை:

கேரளாவில் பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக வாகன ஓட்டிகள் குமரி எல்லைக்கு வந்து பெட்ரோல்-டீசல் நிரப்பி செல்கிறார்ள். பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.4 லாபம் கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவில் விலை அதிகரிப்பு

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்த போதிலும், மாநில அரசு விதிக்கும் வரியின் அடிப்படையில் பெட்ரோல்-டீசல் விலை மாநிலத்துக்கு, மாநிலம் வேறுபடுகிறது.

இதன்படி கேரளாவில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, பெட்ரோலுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்தது. இதனால் கேரளாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.98-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.96.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

குமரி எல்லைக்கு படையெடுப்பு

அதே சமயம் தமிழ்நாட்டில் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.50-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.46-க்கும் விற்பனையாகிறது.

இதனால் கேரளாவை சேர்ந்த பெரும்பான்மையான வாகன ஓட்டிகள் குமரி எல்லையான களியக்காவிளை, படந்தாலுமூடு ஆகிய பகுதிகளில் உள்ள தமிழக பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வந்து பெட்ரோல்-டீசல் நிரப்பி செல்கின்றனர். இதனால் கேரள எல்லையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் விற்பனை சற்று குறைந்துள்ளது. அதே சமயம் தமிழக எல்லையோர பகுதி பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் விற்பனை அதிகரித்து உள்ளது.

ரூ.4 லாபம்

இது குறித்து கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த உமேஷ் கூறும்போது, 'கேரள மாநிலத்தில் பெட்ரோல் ரூ.107.98-க்கும் டீசல்ரூ.96.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.103.50-ஆகவும், டீசல் ரூ.95.46 ஆகவும் உள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.4 லாபம் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனவே கேரள அரசு மக்களின் சிரமத்தை புரிந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்' என்றார்.

இதே போல் மற்ற வாகன ஓட்டிகளும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.4 மிச்சமாவதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்