பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கெங்கையம்மன் சிரசு

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் சிரசு மிதந்து வந்தது.

Update: 2023-05-15 18:33 GMT

கெங்கையம்மன் திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் வேலூர் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் வட மாநிலங்கள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, நேபாளம், மாலத்தீவு உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். வேலூர் மாவட்டத்தில் பொது விடுமுறை அளிக்கப்படும் ஒரே திருவிழா கெங்கையம்மன் சிரசு திருவிழா மட்டுமே. இந்த ஆண்டும் அதுபோல நேற்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 16-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி சித்திரை மாதம் கடைசி நாள் தேரோட்டமும், வைகாசி மாதம் 1-ந்் தேதி கெங்கையம்மன் சிரசு விழாவும் நடைபெறும். அன்று மாலையில் பிரமாண்டமான வாணவேடிக்கையும் நடைபெறும்.

குடியாத்தம் நகரம் மட்டுமின்றி கிராமப் பகுதிகளும் விழாக்கோலம் பூண்டிருக்கும். கெங்கையம்மன் கோவிலை ஒட்டியுள்ள கவுண்டன்ய மகாநதி ஆற்றில் திருவிழாவுக்கு முன்னதாகவே நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டிருக்கும். திருவிழா முடிந்து 15 நாட்களுக்கும் மேலாக கடைகள் இருக்கும்.

சிரசு ஊர்வலம்

இந்த கெங்கையம்மன் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று காலையில் அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. அதிகாலையில் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து சுமார் 6 மணி அளவில் புறப்பட்ட அம்மன் சிரசு நீலிகோவிந்தப்ப செட்டிதெரு, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக சுமார் 3 மணிநேரம் லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கோவிலை அடைந்தது.

வழிநெடுகிலும் நேர்த்திக்கடனாக பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்தனர். பல இடங்களில் ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர். திரும்பும் திசையெல்லாம் வீடுகளிலும், மாடிகளிலும், சாலைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக காட்சியளித்தனர். சிரசு ஊர்வலம் வரும்போது வழிநெடுகிலும் பூ மாலை அணிவிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்தனர். அதிகாலை முதலே வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். மாடிகளில் இருந்து சிரசு மீது பூக்களை தூவினர்.

கண்திறப்பு

தொடர்ந்து ஊர்வலமாக பக்தர் வெள்ளத்தில் மிதந்து சென்ற கெங்கையம்மன் சிரசு கோவிலை வந்தடைந்ததும், அம்மன் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இரவு பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

சிரசு திருவிழாவில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், எம்.எல்.ஏ.க்கள் குடியாத்தம் அமலுவிஜயன், வேலூர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர்ரவி, கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம்பிரதீஷ், நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, தாசில்தார் விஜயகுமார், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், ரோட்டரி ஆளுநர் ஜே.கே.என்.பழனி, அபிராமி கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.என்.ஜோதிகுமார், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகராட்சி வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார் உள்பட வருவாய்த்துறையினர், நகரமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

காலை முதலே திரும்பிய திசையெல்லாம் அறுசுவையுடன் அன்னதானம், குளிர்பானங்கள், நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது. பல இடங்களில் இஸ்லாமியர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து குளிர்பானங்கள், மோர் ஆகியவற்றை வழங்கினார்கள், அன்னதானமும் வழங்கினார்கள்

வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் நித்யா, கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி. சம்பத், கவுரவ தர்மகர்த்தா கே.பிச்சாண்டி உள்பட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்