மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு: மத்திய அரசின் அவசர சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும் என்று பேட்டி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் அவசர சட்டத்தை தி.மு.க. எதிர்க்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-06-02 00:24 GMT

சென்னை,

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது.

அவசர சட்டம்

இந்த சூழ்நிலையில் டெல்லி யில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்தது.

மாநில அரசின் அதிகாரத்தை இந்த சட்டம் பறிப்பதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். இந்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

அவசர சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளை அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

அந்த வகையில் நேற்றுதமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க கெஜ்ரிவால் திட்டமிட்டு இருந்தார். இதற்காக சண்டிகாரில் இருந்து விமானம் மூலமாக நேற்று மாலை கெஜ்ரிவால் சென்னை வந்தார்.

பின்னர் கார் மூலமாக சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டுக்கு வந்தார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், டெல்லி கல்வித்துறை மந்திரி அடிஷி, ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சஞ்சய் சிங், ராகவ் செட்டா, ஆகியோரும் வந்தனர்.

ஆலோசனை

கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அழைத்து வந்தனர். நேற்று மாலை 5 மணிக்கு வந்த அவர்களை வீட்டு வாசலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கெஜ்ரிவாலுக்கும், பகவந்த் மானுக்கும் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார். இதன்பின்னர் தலைவர்கள் சுமார் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

முதல்-அமைச்சர் பேட்டி

இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

முதல்-மந்திரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் என்னை சந்தித்திருக்கிறார்கள். நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் அடிக்கடி கெஜ்ரிவாலை சந்திக்கிற வாய்ப்பைப் பெறுவது உண்டு. அங்கு 'மாடல் ஸ்கூல், மாடல் கிளாஸ் ரூம்ஸ்' என்ற ஒரு அற்புதமான திட்டத்தை நடத்தி கொண்டிருப்பதை அறிந்து, அதுபோல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என்று கருதி அந்த மாடல் பள்ளிகளை, 'மாடல் கிளாஸ் ரூம்'களை எல்லாம் நானும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினோம்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. பெண்களுக்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. அந்த திட்டத்தில் ஒன்றாக மாணவிகள், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைகிறபோது, அவர்களது கல்விக்கு உதவி செய்ய வேண்டும், நிதி உதவி வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து, புதுமைப்பெண் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்.

அந்த திட்டத்தை கெஜ்ரிவால் நேரடியாக வந்து சிறப்பிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரும் ஒப்புதல் தந்து, வருகை தந்து அதை சிறப்பித்தார். அப்படி வந்த நேரத்தில், கோட்டூர்புரத்தில் அமைந்திருக்கக்கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் பார்வையிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

நெருக்கடி

கெஜ்ரிவாலை பொறுத்தவரை ஒரு நல்ல நண்பராக என்னோடு பழகி கொண்டிருக்கக்கூடியவர். நானும் அவரிடத்திலே நல்ல நண்பராக பழகி கொண்டிருக்கிறேன்.

அவருக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, நரேந்திர மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய ஆட்சியை சுதந்திரமாக செயல்பட விடாமல் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறது.

தி.மு.க. எதிர்க்கும்

அதுமட்டுமல்லாமல் டெல்லி துணைநிலை கவர்னர் மூலமாக பல்வேறு தொல்லைகளை தொடர்ந்து கொடுக்கிறது. பணியாளர்கள் தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, டெல்லி அரசுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

ஆனால் அது நிறைவேறக்கூடாது என்ற ஒரு எண்ணத்தோடு பா.ஜ.க. ஆட்சி அவசர சட்டத்தை பிறப்பித்து இருக்கிறது. இந்த சட்டத்தை நிச்சயமாக தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

ஆதரவு தாருங்கள்

இதுகுறித்து இரு முதல்-மந்திரிகளும் எங்களோடு கலந்து பேசினர். மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதல்-மந்திரிகளும், பல்வேறு கட்சி தலைவர்களும் என்னென்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற அந்த சூழ்நிலை குறித்து நாங்கள் கலந்து பேசினோம்.

நிச்சயமாக, எல்லா மாநிலத்தினுடைய முதல்-மந்திரிகளும் அகில இந்திய அளவில் உள்ள கட்சியின் தலைவர்களும் இதற்கு ஆதரவு தர வேண்டும் என்று நான் அவர்களை எல்லாம் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த சந்திப்பு கடந்த வாரமே நடந்திருக்க வேண்டும். சென்ற வாரம் கெஜ்ரிவால் என்னோடு தொடர்பு கொண்டு நேரம் கேட்ட நேரத்தில், நான் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்று, வந்தவுடன் தேதி தருகிறேன் என்று சொன்னேன்.

அங்கிருந்து வந்தவுடனே அவரை சந்திக்க நேரம் கொடுத்து இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. மிக ஆரோக்கியமாக, நாட்டிலே ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அந்த உணர்வோடு இந்த கூட்டம் நடந்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சி கூட்ட தேதி மாற்றம்

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- 12-ந்தேதி நடைபெறவுள்ள கூட்டம் பற்றி பேசியிருக்கிறீர்களா?

பதில்:- அது பற்றியும் பேசியிருக்கிறோம். அது சூழ்நிலை வருகிறபோது சொல்கிறோம். 12-ந்தேதி நிதிஷ்குமார் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அதில் கலந்துகொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. காரணம், ராகுல் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார். 12-ந்தேதி என்னைப் பொறுத்தவரையில், நானும் கலந்துகொள்ள முடியாத நிலை. காரணம், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையை திறந்துவைக்கும் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது.

எனவே கூட்டத்திற்கான தேதியை மாற்றி வையுங்கள் என்று நானும் சொல்லியிருக்கிறேன். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் சொல்லியிருக்கிறார். இப்போது கெஜ்ரிவால், தேதி மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறேன், கட்டாயமாக மாற்றி வைக்கப்படும் என்ற உறுதியை தந்திருக்கிறார்.

ஒருங்கிணைப்பு அவசியம்

கேள்வி:- மத்திய அரசு, மாநில அரசினுடைய அதிகாரங்களை தொடர்ந்து பறித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இப்படியான ஒரு ஒன்றிணைப்பு என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- ஜனநாயகத்தை காப்பதற்கு இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. இது தொடர வேண்டும். இது நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்பின்னர் முதல்-மந்திரிகள் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் ஆகியோரும் பேட்டி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்