முத்தூர்
முத்தூர் - கொடுமுடி சாலை பெருமாள் புதூர் பஸ் நிறுத்தம் அருகில் காவிரி கூட்டுக்குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சாலையில் பள்ளம் உருவாகியுள்ளது.
காவிரி ஆற்று குடிநீர்
கொடுமுடி காவிரி ஆற்றில் குடிநீர் நீரேற்றும் நிலையத்தில் இருந்து காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம், குண்டடம் ஆகிய நகர மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முத்தூர் - கொடுமுடி பிரதான சாலையில் பெருமாள்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் கிழபுறம் சாலையில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பு ஏற்பட்ட குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாகிறது.
மேலும் உடைப்பு ஏற்பட்ட இந்த இடத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் குழாய் உடைப்பினால் தார்ச்சாலை சேதமடைந்து விட்டது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. குழாய் உடைப்பினால் காங்கயம், வெள்ளகோவில் நகர பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
நடவடிக்கை
எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சீரமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.