காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்அமைக்கும் பணிகள் தீவிரம்

Update: 2023-07-29 16:30 GMT


குண்டடத்தில் சாலை விரிவாக்கப்பணியால் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கூட்டுக்குடிநீர் திட்டம்

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் அமராவதி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன் அந்தந்த கிராமங்களில் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் போர்வெல் அமைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் எடுத்து பைப்லைன் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.

கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து பம்ப் செய்யப்பட்டு முத்தூர், காங்கயம், ஊதியூர் வழியாக குண்டடம் ஜம்பிற்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து மேட்டுக்கடை, ஜம்பிற்கு பம்ப் செய்யப்பட்டு அங்கிருந்து நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தையம்பட்டி, பெரியகுமாரபாளையம் ஆகிய 4 பஞ்சாயத்துக்களுக்கு உட்பட்ட சுமார் 35 கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

பெரும்பாலும் பஞ்சாயத்துக்கள் மூலம் போர்வெல்களிலிருந்து பெறப்படும் தண்ணீர் அதிக உப்புத் தன்மையுடனோ அல்லது சப்பையாகவோ குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் லாயக்கற்ற நிலையில் உள்ளதால் சமையல் மற்றும் குடிப்பதற்கு காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்

அமைக்கும் பணிகள் தீவிரம்

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றதால் குண்டடத்திலிருந்து மேட்டுக்கடை ஜம்பிற்கு வரும் குடிநீர்குழாய் முற்றிலும் பழுதாகிப் போனது. அதனால் அன்றிலிருந்து இன்று வரை கடந்த ஒரு வருடமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மேற்கண்ட 35 கிராமங்களுக்கும் தண்ணீர் சப்ளை செய்வது முழுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது இன்னும் சில வாரங்களில் பாதிக்கப்பட்ட 35 கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் சீராக நடைபெறும் என்பதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்