காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: குமாரபாளையத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது-பொதுமக்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குமாரபாளையத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Update: 2022-08-29 18:03 GMT

குமாரபாளையம்:

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்தநிலையில் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது

குமாரபாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள அண்ணா நகர், கலைமகள் தெரு இந்திரா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர், சின்னப்ப நாயக்கன்பாளையம், மேட்டுக்காடு போன்ற பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் நடராஜா திருமண மண்டபத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 3 முறை குமாரபாளையத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்