கேள்விக் குறியாகும் எதிர்காலம் போதையில் சீரழியும் இளைய தலைமுறை; பாதுகாக்க நடவடிக்கை தேவை

கேள்விக் குறியாகும் எதிர்காலம் போதையில் சீரழியும் இளைய தலைமுறை; பாதுகாக்க நடவடிக்கை தேவை

Update: 2023-05-19 21:44 GMT

ஒரு காலத்தில் மதுக்குடித்தவர்கள் கிராமங்களை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் நிலை இருந்தது. வீடுகளில் கூட மதுகுடிப்பவர்கள் பிற உறவினர்களுக்கு தெரியாமல் மறைவாக அருந்தி வருவதும் இருந்தது. ஊருக்கு ஒருவர் அல்லது 2 பேர் மிகப்பெரிய குடிகாரர்களாக, எப்போதும் போதையிலேயே விழுந்து கிடப்பவர்களாக இருந்த காலம் உண்டு. அந்த குடும்பமே குடிகாரன் வீடு என்று ஏளன பேச்சுக்கு ஆளாகும். ஆனால் நாளடைவில் மதுக்குடிக்காதவர்களை ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு இந்த சமூகம் மாறிவருது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.

மது கொண்டாட்டம்

திருமணம், காதுகுத்து, பிறந்தநாள், கோவில் திருவிழா, பண்டிகை காலங்கள் என சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், துக்கமான நிகழ்ச்சியாக இருந்தாலும் மது இல்லாத கொண்டாட்டம் இல்லை என்று சமூகம் மாறி விட்டது.

தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுகுடிக்கும் கலாசாரம் 'சோசியல் டிரிங்கிங்' என்ற பெயரில் பரவி வருகிறது. படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், தொழில் அதிபர்கள், சாதாரண மக்கள் என்று யாரும் விதிவிலக்கு இல்லாமல் இளைய தலைமுறையினர் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள்.

கள்ளச்சாராயம்

பனை மரத்து கள் அதிகப் போதை தராது. உடலுக்கும் அதிக கேடு விளைவிக்காது. ஆனால், கள்ளுக்கு தடை விதித்துவிட்டு மதுபானங்களை விற்பனை செய்துவருகிறோம். போதைப் பிரியர்களுக்கு இவ்வளவு வடிகால் இருந்தும் சமீபத்திய செங்கல்பட்டு, விழுப்புர கள்ளச்சாரய சம்பவங்கள் வேதனையைத் தருகின்றன.

போதை ஊசி

பொதுமக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் கலக்கம் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கஞ்சா, போதை மாத்திரைகள் என்று இளைய தலைமுறைகளை பாதைமாறச் செய்யும் பழக்கங்களும் நிகழ்ந்து வருகின்றன.

வலி நிவாரணி மாத்திரையை வாங்கி தண்ணீரில் கரைத்து அதை ஊசி மூலம் உடலில் செலுத்தி தங்கள் உடலையும், குடும்பத்தினரின் நிம்மதியையும் கெடுத்து வருகிறார்கள்.

போதைக்காக இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் வலிநிவாரணி மாத்திரை கடுமையான வலிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரையாக இருக்கிறது. டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் அதிகம் வரும்.

அச்சம்

சமீபத்தில் ஈரோட்டில் போதை ஊசி மாத்திரை விற்பனை செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 2 இளம்பெண்களும் அடங்கும். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீஸ் அதிகாரியின் மகன், சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் என்று போதை ஊசி, கஞ்சா விற்பனையில் சிக்குபவர்களின் பட்டியல் எதிர்காலத்தை பற்றிய அச்சத்தையும் அவ நம்பிக்கையும் ஏற்படுத்துகின்றன.

கள்ளச்சாராயம், கஞ்சா, போதை மாத்திரை ஆகியவை முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும். டாஸ்மாக் மது விற்பனை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. எனவே இளைய தலைமுறையையும், பெற்றோர்களின் கனவையும் சிதைத்து தமிழ்நாட்டின் வருங்காலத்துக்கு வேட்டு வைக்கும் கஞ்சா, போதை ஊசி கலாசாரம் தமிழ்நாட்டில் இல்லாத நிலையை ஏற்படுத்த உற்பத்தி, விற்பனை, வினியோகம் என்ற போதையின் ஊற்றுக்கண்களை அடைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இதுகுறித்த சமூக ஆர்வலர்கள் கருத்துக்கள் வருமாறு:-

கொடிய நோய்களுக்கு வாய்ப்பு

ஈரோட்டில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வரும் மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் நாகராஜன்:-

சின்ன சின்ன ஆசைகளுக்காக மனிதர்கள் தங்கள் ஒட்டு மொத்த ஆசையையும், வாழ்க்கையையும் அழிப்பதுபோல, ஒரு சில நிமிடங்கள் போதைக்காக இன்றைய இளம் சமுதாயம் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் அழித்து வருகிறது. டாஸ்மாக் மது அல்லது வேறுவகையான போதை வஸ்துகள் பலவும் பதின்ம வயது (டீன் ஏஜ்) பருவத்தினருக்கு சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு எளிதில் கிடைக்கும் போதை மருந்தாக மாத்திரை உள்ளது. இதை தண்ணீரில் கரைத்து உடலில் செலுத்தும்போது உடனடி போதை கிடைக்கிறது. போதை ஊசியை செலுத்திவிட்டு சில நிமிடங்கள் சென்றுவிட்டால் எந்த தாக்கமும் தெரியாது. எனவே உடனடியாக ஒரு மாணவர் அல்லது மாணவி போதை ஊசி பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டுபிடிக்க முடியாது.

அதே நேரம், இந்த போதை மருந்தை ஊசி மூலம் அவர்கள் செலுத்துகிறபோது ஒரே ஊசி அல்லது சிரிஞ்சினை பலரும் பயன்படுத்துகிறார்கள். எனவே ரத்தம் மூலம் பரவும் பல கொடிய நோய்கள் பரவும் வாய்ப்பு இருக்கிறது. மாத்திரையை கலக்கும் தண்ணீரை சூடாக்கி, மாத்திரையை கலந்து வடிகட்டி உடலில் செலுத்தினாலும் அதில் கண்ணுக்கு தெரியாத துகள்கள், அழிக்க முடியாத வைரஸ் கிருமிகள் இருக்கும். அவை நேரடியாக உடலுக்குள் சென்று ரத்த நாளங்களை பாதிக்கும். இதய அடைப்பால் மாரடைப்பு, நுரையீரல் பிரச்சினை, மூளை நரம்புகள் பாதிப்பு என்று பல பிரச்சினைகள் வரும். எப்படி மரணம் நிகழ்கிறது என்பது கூட தெரியாமல் போதை மாத்திரை உபயோகிப்பவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

இன்னும் ஒரு சமூக அவலமாக போதை மருந்துக்காக மாணவிகள் தங்கள் மானத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வைத்து அதிக விலைக்கு சிறுவர்களுக்கு விற்கிறார்கள். அது இளம்பெண்களாக இருக்கிறபோது, மாத்திரைக்கு விலையாக கற்பை சூறையாடுகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட பெண்கள் போதை வெறியில் தங்களுக்கு மாத்திரை கிடைப்பதாக இருந்தால் எதையும் இழக்க தயாராக இருக்கிறார்கள்.

எங்கள் மறுவாழ்வு மையத்துக்கு போதைக்கு அடிமையாகி வரும் சிறுவர்கள், சிறுமிகளின் கதைகள் நெஞ்சை சுட்டு எரிப்பதாகவே உள்ளது. 75 சதவீதம் போதைக்கு அடிமையான சிறுவன்-சிறுமியின் பெற்றோர், அதாவது தந்தைகள் குடிபோதைக்கு அடிமையானவர்களாக, குடிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். போதைக்காக சாராயம் குடிப்பது சாதாரண நிகழ்வு என்று அவர்களின் மனதில் பதிந்து விடுவதால், அவர்கள் பதின்ம பருவத்துக்கு வருகிறபோது போதை நிலையை சோதனை செய்து பார்க்க ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு டாஸ்மாக் சாராயம் எளிதில் கிடைக்காதபோது நண்பர்கள் மூலமாக போதை மாத்திரையும் ஊசியும் எளிதில் கிடைக்கிறது. எனவே பெற்றோர்கள் முதலில் போதை அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டும்.

போதை மாத்திரை அடுத்த கட்டமாக கஞ்சாவுக்கு அழைத்துச்செல்கிறது. கஞ்சா மனநல பாதிப்பை ஏற்படுத்தும். வீதி வீதியாக மனநலம் பாதிக்கப்பட்டு சுற்ற வைக்கும். அடுத்து மதுபோதையிலேயே வாழ்க்கையை வீணடிக்கும். போதையால் நேரடியாக உடல் ரீதியாக ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களைவிட பன்மடங்கு அவர்களின் வீட்டில் உள்ள பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

போதை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வரும் விவரங்களை ரகசிய கணக்கெடுப்பாக அரசு செய்வதுடன், அவர்களுக்கு கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட மதுபொருட்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை முழுமையாக தடை செய்ய வேண்டும். கொரோனா கொள்ளை நோய் என்றால், போதை சமூக கொள்ளைநோய். அதை தடுக்க வேண்டும்.

கலந்துரையாடல் அவசியம்

ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பவித்ரா சேகர்:-

வலி நிவாரணி மாத்திரையை போதை திரவமாக மாற்றி இளம் வயதினர் பயன்படுத்தி வருகிறார்கள். போதை மாத்திரையை சாப்பிடுவதை விட, திரவமாக மாற்றி உடலில் செலுத்தி போதைக்கு ஆளாகிறார்கள். இதை பயன்படுத்த தொடங்கிவிட்டால் தினசரி 2 முறையாவது கட்டாயம் ஊசிப்போட்டு போதை ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். மது, சாராயம் ஆகியவை கெட்ட வாடை வீசும் என்பதால் சிறுவர்கள், பெற்றோர்களிடம் சிக்காமல் இருக்க போதை ஊசியை தேர்ந்து எடுத்து சிக்கலுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடவடிக்கை எடுத்தால் விரைவாக போதைக்கு அடிமையாகும் சிறுவர் -சிறுமிகளை விரைவாக மீட்க முடியும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளின் கைப்பைகளை பெற்றோர்கள் தினமும் சோதனை செய்து மாத்திரைகள், ஊசி போடும் சிரிஞ்ச் ஆகியவை இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அவர்களின் வழக்கமாக தூக்க நேரத்தை தாண்டி தூங்குகிறார்களா? அல்லது தூக்கம் இல்லாமல் சிரமப்படுகிறார்களா? என்பதையும் பெற்றோர் பார்க்க வேண்டும். திடீர் என்று திருட்டுபழக்கம் வருவது. பொய் சொல்வது என்று புதிய பழக்கங்கள் வருகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். கைகளில் ஊசி போட்ட அடையாளங்கள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளிடம் பேச நேரம் செலவிட வேண்டும். அவர்களின் நண்பர்கள், தோழிகளுடனும் கலந்துரையாட வேண்டும். 17 வயது முதல் 24 வயது வரையானவர்கள்தான் போதை மாத்திரை, கஞ்சாவுக்கு அடிமையாகிறார்கள். பள்ளியில் இடைநின்ற மாணவ-மாணவிகள்தான் போதை வஸ்துகளின் வினியோகஸ்தர்களாக இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்களில் போதை கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி, ஆசிரிய-ஆசிரியைகள் குழந்தைகளுடன் கலந்துரையாட வேண்டும். சந்தேகத்துக்கு உரிய மாணவனோ, மாணவியோ இருந்தால் அவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இளஞ்சிறார்களை பாதிக்கும் இந்த போதை அடிமைத்தனத்தில் இருந்து மீட்க இணைந்து அனைவரும் செயல்பட வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்