அவல்பூந்துறை சேமூர் ஆலைக்காக விவசாயிகளிடம் வெட்டும் கரும்புக்கு 15 நாட்களில் பணம் பட்டுவாடா- சக்தி சுகர்ஸ் நிறுவனம் தகவல்

அவல்பூந்துறை சேமூர் ஆலைக்காக விவசாயிகளிடம் வெட்டும் கரும்புக்கு 15 நாட்களில் பணம் பட்டுவாடா- சக்தி சுகர்ஸ் நிறுவனம் தகவல்

Update: 2022-11-07 21:35 GMT

அவல்பூந்துறை சேமூரில் உள்ள சக்தி சுகர்ஸ் ஆலைக்காக விவசாயிகளிடம் வெட்டப்படும் கரும்புக்கு 15 நாட்களில் பணம் வழங்கப்படும் என்று ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை சேமூரில் சக்தி சுகர்ஸ் கரும்பு ஆலை உள்ளது. இந்த ஆலை திலான் சுகர்ஸ் என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. அப்போது அறச்சலூர் உள்வட்டத்துக்கு உள்பட்ட 9 கிராமங்களில் கரும்பு பயிரிடும் விவசாயிகள் இந்த நிறுவனத்துக்கு கரும்பு பதிவு செய்து விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் உடனடியாக இந்த திட்டம் அமலுக்கு வரவில்லை. இந்தநிலையில் கடந்த 2006-ம் ஆண்டு சக்தி சுகர்ஸ் நிறுவனம் திலான் சுகர்ஸ் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் முழுமையாக கையகப்படுத்தியது. தொடர்ந்து சக்தி சர்க்கரை ஆலை முழுவீச்சில் செயல்படுவதற்கான பணிகளை தொடங்கியது.

ஆனால் அறச்சலூர் பகுதி விவசாயிகள் முழுமையாக கரும்பினை சக்தி சர்க்கரை ஆலைக்கு வழங்க முன்வரவில்லை. இந்தநிலையில் தமிழ்நாடு சர்க்கரை மற்றும் கரும்புத்துறை ஆணையாளர் கடந்த அக்டோபர் 19-ந் தேதி அறச்சலூர் உள்வட்டத்தில் 9 கிராமங்களில் கரும்பு பயிரிடுபவர்கள் இனிமேல் சக்தி சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

இது விவசாயிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு தரப்பு விவசாயிகள் சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு விற்க முடியாது என்று போராட்டங்களை தொடங்கி உள்ளனர். அதே நேரம் இன்னொரு தரப்பினர் சக்தி சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிகிறது.

அவர்கள் புதிதாக சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்குவதால் உடனடியாக பணம் கிடைக்கும் என்றும், கரும்பினை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளேயே வழங்கி விடலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதுபற்றி அறச்சலூர் அருகே பூமாண்டம்வலசு பகுதியை சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவர் கூறியதாவது:-

நான் 10 ஆண்டுகளாக கரும்பு பயிரிட்டு வருகிறேன். தற்போது 8 ஏக்கர் கரும்பு உள்ளது. ஏற்கனவே நான் கரும்பு பதிவு செய்த ஆலையில் 15 மாதங்கள் ஆகியும் அறுவடை செய்யவில்லை. இதனால் ஏக்கருக்கு சுமார் 15 டன் கரும்பு நஷ்டமானது. இதற்கு ஆலை அதிகாரிகள் முறையான பதில் கூறவில்லை. மனஉளைச்சலில் இருந்த எனக்கு சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. சக்தி சர்க்கரை ஆலை அருகிலேயே இருப்பதால் இங்கேயே கரும்பு பதிவு செய்ய முடிவு செய்து இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விளக்கேத்தியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவர் கூறியதாவது:-

நான் 10 ஏக்கரில் கரும்பு நடவு செய்து இருக்கிறேன். ஏற்கனவே கரும்பு விற்கும் ஆலையில் பல கசப்பான அனுபவங்கள் உள்ளன. கரும்பு வெட்டும் நிலையிலேயே ஆட்களை வேறு இடத்துக்கு அழைத்துச்சென்று விடுவதால், பாதி கரும்பு காய்ந்து கட்டையாகி விடும். பருவத்தில் இருந்து 4 மாதம் கழித்து கரும்பு வெட்டுவதால் பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இனிமேல் அரசு உத்தரவின் படி சக்தி சர்க்கரை ஆலைக்கே கரும்பு பதிவு செய்யலாம் என்று உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

எல்லைக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேஸ்வரி கூறியதாவது:-

நான் 5 ஏக்கர் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். கடந்த ஆண்டு 12-வது மாதத்தில் வெட்ட வேண்டிய கரும்பை 18 -வது மாதத்தில் வெட்டினார்கள். இதனால் கரும்பு காய்ந்து போய் இருந்தது. தோகை அகற்ற தீ வைத்ததால் சுமார் 10 டன் கரும்பு எரிந்து நஷ்டமானது. இதனால் நடவுக்கு பாடுபட்டு உழைத்த பணம் கூட கிடைக்கவில்லை. அடுத்த நடவின்போது, ஏற்கனவே எரிந்த கரும்பு கட்டைகளை அப்புறப்படுத்தவும் அதிக கூலி கொடுக்க வேண்டியது ஆனது. இனி சக்தி சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்வதால் இந்த சிரமம் இருக்காது. இதுதொடர்பான உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதுடன், வருங்காலத்தில் அதிக அளவில் கரும்பு பயிரிடும் வாய்ப்பும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மோளபாளையம் பகுதி விவசாயி கதிர்வேல் கூறியதாவது:-

நான் இயற்கை முறையில் 4½ ஏக்கர் கரும்பு பயிரிட்டு வருகிறேன். கரும்பு அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்தால் கூடுதல் கரும்பு கிடைக்கும் என்பதால் 4½ அடி பார் அமைத்து நடவு செய்து இருக்கிறேன். ஏற்கனவே நான் கரும்பு பதிவு செய்த ஆலையில் முதலில் அறுவடை எந்திரம் வைத்து முறையாக அறுவடை செய்தனர். ஆனால், பாதி வயல் முடிந்ததும், எந்திரத்தை கொண்டு சென்றுவிட்டு, வழக்கம்போல ஆட்களை வைத்து அறுவடை செய்தனர். இதனால் சரியாக கரும்பு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதுடன், ஏக்கருக்கு ரூ.700 நஷ்டமும் ஏற்பட்டது. இதுபற்றி சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்திடம் கேட்டால் முறையான பதில் அளிக்க மறுக்கிறார்கள். இந்தநிலையில் சக்தி சர்க்கரை ஆலை எந்திரங்கள் வைத்து அறுவடை செய்வதில் அனுபவம் மிக்கவர்கள் என்பதால் எனது இயற்கை விவசாயத்துக்கு ஊக்கமாக அமையும். எனவே இந்த மாற்றத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

இவ்வாறுஅவர் கூறினார்.

அறச்சலூரை சேர்ந்த விவசாயி வசந்தி கூறியதாவது:-

நான் 12 ஏக்கர் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். கீழ்பவானி வாய்க்காலை ஒட்டி எனது கரும்பு வயல் இருப்பதால், வாய்க்காலில் தண்ணீர் வந்தால் வயலில் நீர் பெருகிவிடும். எனவே கடந்த முறை வாய்க்காலில் தண்ணீர் வருவதற்கு முன்பே கரும்பு வெட்ட ஆலை நிர்வாகத்திடம் கூறி இருந்தேன். ஆனால் காலதாமதம் செய்தனர். இதனால் எனக்கு வெட்டுக்கூலி வழக்கத்தை விட அதிகமாகியது. பாதி கரும்பை வெட்ட முடியாமல் நஷ்டமும் ஏற்பட்டது. எனவே இனிமேல் அரசு உத்தரவுப்படி சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்ய முடிவு செய்து இருக்கிறேன். ஆலை அருகில் இருப்பதால் விரைவாக ஆலைக்கு எடுத்துச்செல்லவும் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நல்லமங்காபாளையத்தை சேர்ந்த விவசாயி முருகன் கூறியதாவது:-

நான் 8 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு இருக்கிறேன். நான் ஏற்கனவே கரும்பு பதிவு செய்த ஆலையில் மிகவும் காலம் தாழ்த்தி கரும்பு அறுவடை செய்கிறார்கள். இதனால் கரும்பு காய்ந்து போகிறது. கரும்புக்கு தீவைத்து வெட்டுவதால் தொடர்ந்து எனக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே இனிமேல் சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்து விற்பனை செய்ய இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வாறு விவசாயிகள் தங்கள் ஆலைக்கு ஆதரவாக இருப்பதாக சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் தெரிவிக்கிறார்கள். சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு சலுகைகள், குறிப்பிட்ட நேரத்தில் பணப்பட்டுவாடா செய்யப்படும் என்று ஆலை நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

இதுபற்றி பூந்துறை சேமூர் சக்தி சர்க்கரை ஆலை முதுநிலை பொது மேலாளர் வி.திருவேங்கடம் கூறியதாவது:-

கரும்பு ஆலை நடத்துவதில் எங்கள் சக்தி சர்க்கரை ஆலை மிகவும் அனுபவம் மிக்கதாகும். கரும்பு அறுவடை எந்திரத்தின் மூலம் அறுவடை செய்து வருகிறோம். எனவே விவசாயிகள் பதிவு செய்த கரும்பினை தாமதமின்றி 12 மாதங்களில் அறுவடை செய்து விடுவோம்.அதிக பட்சம் 15 நாட்களில் கரும்புக்கான பணம் பட்டுவாடா செய்யப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம். எங்கள் விவசாயிகள் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 50 டன் கரும்பு மகசூல் செய்ய தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். அறச்சலூர் மற்றும் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்கு பூந்துறை சேமூர் சக்தி சர்க்கரை ஆலை மிக அருகாமையில் இருக்கிறது. எனவே விவசாயிகள் வாடகை வாகனங்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்கள் சொந்த டிராக்டரிலேயே கரும்பு கொண்டு வந்து ஆலையில் கொடுத்து விடலாம். கரும்பு வெட்டி ஏற்றி வருவதற்கான வண்டி வாடகையை ஆலை நிர்வாகம் அளிக்கும். எனவே சொந்த டிராக்டர்களில் கரும்பு ஏற்றி வருபவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுபோல் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்வதால் வெட்டுக்கூலி குறைவாகவும், விரைவாகவும் நடைபெறும்.

எனவே விவசாயிகள் சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்வதன் மூலம் அறுவடையை விரைவாக முடிக்கவும், உரிய பணத்தை உரிய காலத்தில் பெறவும் வசதியாகவும் இருக்கும்.

இவ்வாறு முதுநிலை பொது மேலாளர் வி.திருவேங்கடம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்