அரசு உதவிகள் செய்தால் செருப்பு தைக்கும் தொழில் வளர்ச்சி பெறும்- வங்கிகள் கடன் வழங்க கோரிக்கை

அரசு உதவிகள் செய்தால் செருப்பு தைக்கும் தொழில் வளர்ச்சி பெறும்- வங்கிகள் கடன் வழங்க கோரிக்கை

Update: 2022-10-18 21:11 GMT

உடலில் அணியும் பொருட்களை அணிகலன்கள் என்று ஒவ்வொரு பெயர் கூறி தமிழ் அழகாக வகைப்படுத்துகிறது. அதன்படியே காலில் போடும் செருப்புக்கு காலணி என்று பெயர்.

காலணி

மனித இனம் தோன்றிய பிறகு உடலை தோல் ஆடைகளால் மறைக்க தொடங்கிய பிறகும், கால்கள் மண்ணில் குதிரை பாய்ச்சலில் சென்று கொண்டிருந்தன. ஆனால், குளிர் காலங்களில் கால் பாதங்களை பாதுகாக்க வேண்டியே செருப்புகளை கண்டு பிடித்து இருக்கிறார்கள். மரப்பட்டையில் இருந்து தோல் செருப்புக்கு மாறினார்கள். சுமார் 50 ஆயிரம் அல்லது 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.

தொல் செருப்புகளை பல்வேறு வடிவங்களில் கால்களில் அணியும் வழக்கம் பண்டைய கிரேக்க பண்பாட்டில் இருந்து உள்ளது. அது நாளடைவில் உருமாற்றங்கள் பெற்றது. ஒரு காலத்தில் காலணி அணிவது பெருமைக்கு உரிய விஷயமாகவும் இருந்தது.

பாதுகாப்பு

தமிழ்நாட்டில் மிக பண்டைய காலத்தில் இருந்தே செருப்புகள் அணியும் வழக்கம் இருந்தது. மனித உடலின் அத்தனை அணிகலன்களும் அவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து ஆபத்தை அளிக்கும். ஆனால் காலணி மட்டுமே அவர்களை பாதுகாக்கும். எனவேதான் அதற்கு பாதுகை, பாதரட்சை என்ற பெயர்களும் ஏற்பட்டு இருக்கலாம். மன்னர்கள் காலத்தில் செருப்பு தைப்பவர்கள் அவர்களின் பாதுகாவலர்களாகவும் பெரும் வீரர்களாகவும் இருந்தனர்.

ஈரோடு மண்ணின் வீர வரலாறுகளில் ஒன்றாக இருக்கும் தீரன் சின்னமலை வரலாற்றில், செருப்பு தைக்கும் குலத்தை சேர்ந்த பொல்லான் பெரு வீரராக இருந்தது பதிவாகி இருக்கிறது.

தொழில் பாதிப்பு

முற்காலத்தில் செருப்பு போடுவதற்கு என்று எந்த தடையும் இல்லாதபோது செருப்பு தைக்கும் தொழில்செழித்து இருந்தது. ஆனால், இடைக்காலத்தில் செருப்பு அணிவதற்கும் தடை என்ற ஒரு இருண்டகாலம் இருந்தது. அப்போது உணவு உற்பத்தி தவிரஅனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன. அடிமை வாழ்வு நிலைபெற்றது.

சுதந்திரத்துக்கு பிறகு, இந்த நிலை மாறியது. மீண்டும் செருப்பு தைக்கும் தொழில் வளர்ச்சி அடைந்தது. தோல்களால் செருப்பு தைத்து வந்தவர்கள், தேவை அதிகரித்ததால் டயர்களிலும் செருப்புகள் தைத்தனர். செருப்புகள் வடிவங்கள் மாறின. ஆனால், அதை தைக்கும் மக்களின் நிலை மட்டும் உயரவில்லை.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானி, பெருந்துறை, கொடுமுடி என்று அனைத்து பகுதிகளிலும் பரவலாக செருப்பு தைக்கும் தொழில் செய்யும் மக்கள் இருந்தனர். அவர்கள் சுதந்திரத்துக்கு பின்னர் இந்திய அரசின் மூலம் காதி-கதர் நிறுவனத்துக்கு செருப்புகள் தைத்து கொடுத்தனர். வீதிகளில் செருப்பு தைப்பது, ஷூ பாலீஸ் போடுவது என்ற பணிகளில் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு இருந்தனர். ஆனால், இப்போது 50-க்கும் குறைவானவர்கள் வீதியோரங்களில் செருப்பு தைக்கிறார்கள். 10-க்கும் குறைவானவர்கள் பெட்டிக்கடை வைத்து செருப்பு தைத்தும், செருப்பு விற்பனை செய்தும் வருகிறார்கள்.

இந்த நிலை ஏன் ஏற்பட்டது?.

சிறுதொழில் முனைவோர்

இதுபற்றி ஈரோட்டில் செருப்பு கடை வைத்து இருக்கும் நா.விநாயகமூர்த்தியின் மகன் வி.வெங்கடேஷ் கூறியதாவது:-

எங்கள் பகுதி ராஜாஜி புரத்தில் சுமார் 1,200 குடும்பங்கள் உள்ளன. இதில் உள்ள அனைத்து ஆண்களும் செருப்பு தைக்கும் தொழில் தெரிந்தவர்கள்தான். 30 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் கூலித்தொழிலுக்கு செல்வது இல்லை. செருப்பு தைக்கும் தொழிலை சுய தொழிலாக செய்து சிறு தொழில் முனைவோர்களாக இருந்தனர். குடும்பம் நடத்த தேவையான வருவாயும் கிடைத்து வந்தது. ஆனால், அவர்கள் அதை சரியாக பேணவில்லை. தங்கள் உற்பத்தியை தரம் உயர்த்தவும் இல்லை.

எனது தந்தை சாதாரண பெட்டிக்கடை வைத்து செருப்பு தைத்து வந்தார். அவரது கடுமையான உழைப்பு, தொழில் நேர்த்தி ஆகியவற்றை பல வங்கி அதிகாரிகள் நேரடியாக பார்த்தனர். எனவே அவர் தாட்கோ மூலம் கடன் பெற விண்ணப்பித்தபோது அவருக்கு கடன் கிடைத்தது. அந்த தொகையை சிறிதும் வீணடிக்காமல் குடும்ப உறுப்பினர்களை வைத்தே கடினமாக உழைத்து முன்னேற்றம் அடைந்தார்.

வங்கி கடன் உதவி

இதுபோல் எங்கள் பகுதியில் சுட்டிக்காட்டுவது என்றால் 10 அல்லது 20 பேர் மட்டுமே உள்ளனர் என்பது வருத்தத்துக்கு உரியது. செருப்பு தைக்கும் தொழிலை விட்டு அவர்கள் பல்வேறு கூலி வேலைகளுக்கும் சென்று விட்டனர். பெரு நிறுவனங்களின் செருப்புகள் சந்தையில் அதிகரித்து விட்டது இதற்கு காரணம். எங்கள் மக்கள் செய்யும் செருப்புகள் தோலில் பசை போட்டு ஒட்டி செய்யப்பட்டவையாக வந்தன. இது மழை, வெயிலில் பாதிக்கப்படும். ஆனால் பெரு நிறுவனங்கள் மழை, வெயில் என்று எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே நுகர்வோரும் அவற்றையே விரும்புகிறார்கள். அதுபோன்று செருப்பு உற்பத்தி செய்யும் எந்திரங்கள் அமைக்க குறைந்த பட்சம் ரூ.1 கோடி வேண்டும். அது எங்கள் மக்களால் சாத்தியம் இல்லை. அதே நேரம் கல்வி குறித்த விழிப்புணர்வும் மிகவும் குறைவாக இருப்பதால், பெரும்பாலும் அனைவரும் கூலி வேலைகளுக்கே சென்று வருகிறார்கள். இந்த நிலை மாற, செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு வங்கிகள் மூலம் குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் கடன் வழங்க வேண்டும். இதன்மூலம் சிறுதொழில் முறையில் சிறந்த செருப்புகளை உற்பத்தி செய்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கவும் முடியும். இதன் மூலம் செருப்பு தைக்கும் தொழில் வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கந்து வட்டி

ஈரோடு பஸ் நிலையம் அருகே செருப்பு தைக்கும் கடை வைத்து இருக்கும் ஜி.ரங்கராஜ் என்பவர் கூறியதாவது:-

எனது தந்தை எனது 5 வயதிலேயே இறந்து விட்டார். எனவே குடும்பத்தை காப்பாற்ற, தந்தை செய்த தொழிலான செருப்பு தைக்கும் தொழிலுக்குள் வந்தேன். அப்போது எனது அம்மா செல்லம்மா, எனக்கு சிறு கணக்குகள் சொல்லி கொடுத்தார். தமிழை எழுத்துக்கூட்டி படிக்கவும் வைத்தார். படிப்பை விட குடும்ப சுமை அதிகமாக இருந்ததால், படிக்கும் ஆசை இருந்தும் தொழிலில் முழு மூச்சாக இறங்கினேன். ஆனால், தொடர்ச்சியாக "தினத்தந்தி" -யை எழுத்துக்கூட்டி படித்து படித்து இப்போது நன்றாக தமிழ் வாசிக்கிறேன். 30 ஆண்டுகளுக்கு முன்பே செருப்புகள் தைத்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வந்தேன். ஆனால், பிளாஸ்டிக் செருப்புகளின் அறிமுகத்தால், எங்கள் தொழில் வீழ்ச்சி அடைந்தது.

பிறகு இந்த இடத்தில் அரசின் உரிமம் பெற்று பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். நேர்த்தியாக தொழில் செய்வதால் தினசரி 50-க்கும் மேற்பட்டவர்கள் வந்து பழைய செருப்புகளை தைத்து செல்கிறார்கள். நான் சர்க்கரை நோயாளிகளுக்கான செருப்புகளை தைத்து கொடுத்து வருகிறேன். என்னிடம் பொருளாதார வசதி இல்லை. வங்கியில் கடன் கேட்டால் சொத்து அடமானம் கேட்கிறார்கள். சொந்த வீடு கூட இல்லாமல் இருக்கும் நாங்கள் அடமானம் செய்ய எதை கொடுக்க முடியும். எப்போதே சிலர் கடன் வாங்கிவிட்டு சரியாக கட்டவில்லை என்பதால், எங்கள் சமூகத்தினருக்கு வங்கிகள் கடன் தர மறுக்கிறார்கள். நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கு முறையாக வங்கி கடன் கொடுத்தால் அதன் மூலம் எங்கள் தொழிலை மேம்படுத்துவோம். அதுவரை எங்கள் வாழ்வு கந்து வட்டிக்கு பணம் செலுத்துவதிலேயே கடந்து விடும். எங்கள் சமூகத்தில் உள்ளவர்கள் படித்தால் அரசு வேலை கிடைக்கும். ஆனால், அதுபற்றிய விழிப்புணர்வு இன்னும் இல்லாமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கும் தன்மை

பஸ் நிலையம் அருகே செருப்பு தைக்கும் தொழில் செய்து வரும் ஜி.தேவராஜ் என்பவர் கூறியதாவது:-

தொழிலில் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் இருந்தால் நம்மை தேடி மக்கள் வருவார்கள். அதுபோல தினமும் என்னிடம் பலரும் வருகிறார்கள். ஆனால், நாங்கள் தைத்துக்கொடுக்கும் செருப்பை அணிபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால், நாங்களும் ரெடிமேடு செருப்புகளை வாங்கி விற்கிறோம். எங்களிடம் ரூ.100 கொடுத்து பாலீஸ் செய்தால் பழைய ஷூ கூட பளபளக்கும். ஆனால் இப்போது யாரும் வருவதில்லை.

நாங்கள் உற்பத்தி செய்யும் செருப்புகள் ஆயுட்காலம் முடிந்தால் மக்கும் தன்மை உடையவை. ஆனால், பிளாஸ்டிக் செருப்புகள் மக்காது. எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எங்களிடம் செருப்புகள் வாங்க வேண்டும். ஒரு ஷூ ரூ.1,500-க்கும் நல்ல முறையில் செய்து தருகிறோம். பழுதடைந்த ஷூ-க்களை ரூ.500 க்கு புதுப்பித்து தருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

செருப்பு தைக்கும் தொழில் சமூகத்தில் ஏற்கப்படாதது இல்லை. எல்லா இனத்தை சேர்ந்தவர்களும் செருப்பு கடைகள் வைத்து இருக்கிறார்கள். செருப்பு உற்பத்தி செய்கிறார்கள். எனவே மதிப்பு கூட்டப்பட்ட தரத்துடன் சிறு தொழிலாளர்கள் செருப்புகளை உற்பத்தி செய்ய வேண்டும். அதே நேரம் அரசும், வங்கிகளும் கடன் கொடுத்து இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும். கல்வி முழுமையாக சென்று சேரவும், பள்ளிப்படிப்புக்கு பிறகு, இவர்களை கல்லூரிகளில் சேர்த்து நல் வாய்ப்புகள் வழங்கவும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஆங்காங்கே சிலர் அரசு பணிகளிலும், தனியார் துறை உயர் பணிகளிலும் சேர்ந்து வருகிறார்கள். அவர்களை மன்மாதிரியாக கொண்டு அனைத்து மாணவ-மாணவிகளும் நன்றாக படித்தால் அவர்களின் வாழ்வில் புதுவிடியல் பிறக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்