ஈரோடு மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 3½ லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள்- குடங்களுடன் தண்ணீருக்கு அலைய வேண்டியதில்லை என பெண்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் 3½ லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் குடங்களுடன் தண்ணீருக்கு அலையவேண்டியது இல்லை என பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-10-11 21:42 GMT

ஈரோடு மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் 3½ லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் குடங்களுடன் தண்ணீருக்கு அலையவேண்டியது இல்லை என பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குடிநீர் பிரச்சினை

'நீரின்றி அமையாது உலகு'. நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய அடிப்படை தேவையே குடிநீர்தான். பல்வேறு நவீன வசதிகளுடன் நாம் வாழ்ந்து வந்தாலும், இன்னும் கிராம புறங்களில் ஏன் நகரங்களிலும் மக்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதிக அளவில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெறுவதே குடிநீர் பிரச்சினைக்காகத்தான்.

இந்தநிலையில்தான் கிராமப்புறங்களில் வீடுகள்தோறும் குடிநீர் கிடைக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ஜல் ஜீவன் மிஷன் என்கிற உயிர் நீர் இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது.

அதிக வரவேற்பு

இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் அமைத்து குடிநீர் கொண்டு செல்வதே முக்கிய நோக்கமாகும். வருகிற 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பதே திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் இந்த திட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் குறைந்தது 55 லிட்டர் குடிநீர் அளிக்கப்பட வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாகும். கிராமப்புறங்களில் பெண்கள் குடங்களுடன் குடிநீர் தேடி அலைவதற்கு விடிவு காலம் பிறக்கும் வகையில் திட்டம் இருப்பதால் கிராம மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

3½ லட்சம் வீடுகள்

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் பொது பிரிவினருக்கு மத்திய, மாநில அரசுகள் தலா 45 சதவீதம் நிதியும், மீதமுள்ள 10 சதவீதம் நிதி பொதுமக்களின் பங்களிப்பாகவும் உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மலைவாழ் மற்றும் வனப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் 47.5 சதவீதம் நிதி அளிக்கிறது. மீதமுள்ள 5 சதவீதம் நிதி பொதுமக்கள் பங்களிப்பாக இருக்க வேண்டும். இதில் பொதுமக்கள் தங்களுடைய பங்களிப்பாக உடல் உழைப்பாகவோ, பொருளாகவோ அல்லது பணமாகவோ அளிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக பகுதிகளில் மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 703 வீடுகள் உள்ளன. இதில் 64 ஆயிரத்து 412 வீடுகளுக்கு ஏற்கனவே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 3 லட்சத்து 56 ஆயிரத்து 291 வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டி உள்ளது.

அனுமதி

இந்த திட்டத்தில் தற்போது வரை நடைபெற்றுள்ள பணிகளின் விவரம் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஊராட்சிகளிலும் பணிகள் நடந்து வருகிறது. இதில் கடந்த 2020-2021 ஆம் நிதி ஆண்டில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 566 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ரூ.118 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. அதன்படி 119 ஊராட்சிகளில் ரூ.96 கோடியே 83 லட்சத்து 7 ஆயிரம் செலவில் 96 ஆயிரத்து 656 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் 14-வது மற்றும் 15-வது நிதிக்குழுவின் மூலமாக 26 ஆயிரத்து 83 வீடுகளுக்கு ரூ.7 கோடியே 22 ஆயிரம் செலவில் குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் நடப்பு நிதி ஆண்டில் இதுவரை மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, நம்பியூர், பவானி, டி.என்.பாளையம், தாளவாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட மொத்தம் 42 ஊராட்சிகளில் ரூ.50 கோடியே 74 லட்சம் செலவில் 37 ஆயிரத்து 63 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகளுக்கு விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

100 சதவீதம் பணிகள் நிறைவு

கோபி அருகே நஞ்சைகோபி ஊராட்சி தொட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சீதாலட்சுமி கூறியதாவது:-

நாங்கள் ஆழ்துளை கிணற்று தண்ணீரை குடிநீராகவும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறோம். இந்தநிலையில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். எங்களது வீட்டில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோபி அருகே பா.வெள்ளாளபாளையம் ஊராட்சியில் 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அந்த ஊராட்சி தலைவர் சத்தியபாமா வேலுமணி கூறுகையில், "ஜல் ஜீவன் மிஷன் திட்டம் எங்களது ஊராட்சியில் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இங்கு 2 ஆயிரத்து 600 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் 3 மணிநேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பணிகள் நிறைவடைந்து 5 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது", என்றார்.

10 நாட்கள்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேம்பத்தி ஊராட்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் கூறுகையில், "பாதுகாக்கப்பட்ட ஆற்று குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு நாள் வருகிறது. அதே குழாயில் ஆழ்துளை கிணற்று தண்ணீரும் வழங்கப்படுகிறது. எனவே ஆற்று குடிநீரை தனிக்குழாயில் வினியோகம் செய்ய வேண்டும்", என்றார்.

எண்ணமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பாலு, "வீடுகளுக்கே நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், பெண்கள் குடங்களை எடுத்து கொண்டு குடிநீருக்காக அலைய வேண்டியதில்லை. இந்த திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது", என்றார். கெட்டிசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த அருள், "10 நாட்களுக்கு ஒருமுறை ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும்", என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்