காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு
ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ள காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பாராட்டினார்.
காட்பாடி பள்ளி மாணவர்கள்
அரசு பள்ளி மாணவர்கள் திறமைகளை மேம்படுத்த ராக்கெட் சயின்ஸ் ஆன்லைன் பயிற்சி திட்டம், பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குனர் சிவதாணுப்பிள்ளை தலைமையில் அகத்தியம் அறக்கட்டளை மற்றும் அர்சாகோ சொல்யூஷன்ஸ் இணைந்து ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதில் 29 மாவட்டங்களை சேர்ந்த 67 அரசு பள்ளிகளில் இருந்து 500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
15 ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு முதல் கட்ட பயிற்சி கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமாரால் வழங்கப்பட்டது. இதில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் தேர்வு
இந்த 500 மாணவர்களில் 220 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு அறிவியல் அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருகை பதிவேடு, வினாடி வினா, குறுகிய வினாடி வினா விடை மூலம் 127 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கோயம்பத்தூர் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் ராக்கெட் அறிவியில் சம்பந்தமாக பயிற்சி மாடல் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதிலிருந்து இறுதியாக 75 மாணவர்கள் அடுத்த மாதம் ரஷ்யாவில் உள்ள யூரிகாகரின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கலெக்டர் பாராட்டு
இதில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நித்திஷ்குமார், யஷ்வந்த், வழிகாட்டி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஜி.டி.பாபு, ஊசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கோட்டீஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த இரு மாணவர்கள் மற்றும் அவர்களை தயார் படுத்திய அறிவியல் ஆசிரியர் பாபு ஆகியோரை கலெக்டர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று பாராட்டினார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வர பிள்ளை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.அன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.