கடைகோடியில் இருக்கும் கத்திரி மலை கிராம மக்களுக்கு ஆன்லைனில் மருத்துவ வசதி
கடைகோடியில் இருக்கும் கத்திரிமலை கிராம மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஈரோடு
கடைகோடியில் இருக்கும் கத்திரிமலை கிராம மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய சாலை
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடி கிராமமாக அமைந்து உள்ளது கத்திரிமலை. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்து உள்ள இந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லாமல் இருந்தது. தற்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணியின் முயற்சியால் புதிதாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. 8.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 45 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்து உள்ள இந்த சாலை கத்திரிமலையில் உள்ள மாதம்பட்டி, மலையம்பட்டி கிராம மக்களுக்கு புதிய வாசலை திறந்து வைத்து உள்ளது.
அதே நேரம் இங்கு உள்ள மக்களுக்கு உடனடி மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆன்லைன் மருத்துவ ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக அதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மருத்துவ வசதி
வாரம்தோறும் புதன்கிழமை மாலை 5 மணி முதல் மாலை 6 மணிவரை பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர் பார்த்திபன் ஆன்லைன் மூலம் கத்திரிமலை கிராம மக்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பு ஏற்பாடு கத்திரிமலை உண்டு உறைவிட பள்ளிக்கூடத்தில் நடக்கிறது. பகல் நேரத்தில் மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் கணினி, புதன்கிழமை மாலையில் நோயாளிகள் மருத்துவரை சந்திக்க பயன்படுத்தப்படுகிறது. இவர்களுக்கு இணைப்பு பாலமாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஆர்.சந்திரசேகரன், ஆசிரியர் குணசேகரன் ஆகியோர் உள்ளனர்.
உடல் பாதிப்பு இருப்பவர்கள் கணினியின் முன்பு உள்ள காமிராவில் முகத்தை காட்டி, மைக்கில் டாக்டர் பார்த்திபனுடன் உரையாடுகிறார்கள். அவரும் அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு உடனடி நிவாரணத்துக்கான மருத்து மாத்திரைகளை பரிந்துரை செய்கிறார். மருந்து மற்றும் மாத்திரைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க கத்திரிமலை கிராமத்தை சேர்ந்த ரோஜா என்கிற பெண் பணியில் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் டாக்டர் கூறும் மருந்துகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார். இதனால் சாதாரண காய்ச்சல், சளி, உடல் வலி, சிறு காயங்கள் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் உடனடி மருந்து பெறுகிறார்கள்.
சேவை செய்ய ஆர்வம்
இதுபற்றி கத்திரிமலை கிராமத்தின் மருந்தாளுனராக விளங்கும் ரோஜா கூறியதாவது:-
நான் பவானி அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து உள்ளேன். எனது சொந்த ஊர் கத்திரிமலைதான். இங்கேயே ராஜேந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தோட்ட வேலைகள் செய்து வருகிறேன். இந்தநிலையில்தான் சென்டர் 4 சோசியல் கம்பியூட்டிங் நிறுவனத்தினர் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. டாக்டர் பார்த்திபன் கூறும் மருந்துகளை எடுத்துக்கொடுப்பது பற்றி 3 நாட்கள் பயிற்சி அளித்தார். அதுமட்டுமின்றி, சிறு காயங்களுக்கு கட்டு போடுவது, புண்களுக்கு மருந்து போடுவது உள்ளிட்ட பயிற்சியும் அளித்தனர். என் மீது நம்பிக்கை வைத்து இந்த பணியை கொடுத்து இருக்கிறார்கள். 3 மாதங்களாக இந்த பணியை செய்கிறேன். மாதம் தோறும் ஊதியம் தருவதாக கூறினார்கள். விரைவில் ஊதியம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த வேலை எனக்கு பிடித்து உள்ளது. முைறயாக எனக்கு செவிலியர் பயிற்சி அளித்தால், அதை கற்று எங்கள் மக்களுக்கு சேவை செய்ய ஆர்வமாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய வெளிச்சம்
டாக்டர் எங்களிடம் அக்கறையாக விசாரிக்கிறார். உடலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும் அவரிடம் பேசுவதற்காகவாவது புதன்கிழமை வந்துவிடுகிறோம். புதன்கிழமை மட்டுமல்ல எப்போது மருந்து தேவை என்று சொன்னாலும் ரோஜா உடனடியாக வந்து டாக்டரிடம் விவரம் கூறி மருந்து மாத்திரைகள் தருகிறார். இதனால் நாங்கள் இப்போது காய்ச்சல், சளி குறித்து அச்சப்படுவதில்லை.
கத்திரிமலை கிராமத்துக்கு சாலை, இணையவழி கல்வி, ஆன்லைன் மருத்துவம் என்று ஒவ்வொன்றாக வந்துகொண்டிருப்பது புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.