கதவணை பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கதவணை பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
திருமருகல் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட கதவணை பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கதவணை பாலம்
திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சி காமராஜபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அன்றாடம் தேவைகளுக்கு காமராஜபுரம் பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருமருகல், திட்டச்சேரி, மயிலாடுதுறை, காரைக்கால் சென்று வர வளப்பாற்றின் குறுக்கே உள்ள கதவணை பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
வளப்பாற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை மூலம் பல லட்சம் மதிப்பீட்டில் கதவணை பாலம் சீரமைக்கும் பணிகளும், கரைகளை பலப்படுத்தும் பணிகளும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது.
பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள்
இந்த பாலம் சீரமைக்கும் பணிகளை முழுமையாக செய்து முடிக்காமல் பாதியில் நிறுத்திவிட்டனர். இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்று வர வழி இல்லாமல் பல கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி வரும் நிலைக்கு வந்துள்ளார்.
மேலும் காவிரி நீர் கடைமடை பகுதியான திருமருகல் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராம பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து சேதப்படுத்தும் அபாய நிலை உள்ளது. வாய்க்கால் கதவணைகளை கட்டி முடிக்கப்படாமல் விவசாயிகள் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லமுடியாமல் தற்காலிகமாக செங்கற்களை கொண்டு கதவணையை இயக்குகின்றனர்.
விரைந்து முடிக்க வேண்டும்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாதியில் நிறுத்தப்பட்ட கதவணை பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.