காசியின் வெளிநாட்டு நண்பர் சிறையில் அடைப்பு

ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய விவகாரம்: காசியின் வெளிநாட்டு நண்பர் சிறையில் அடைப்பு

Update: 2022-10-17 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர், நாகர்கோவில் பகுதியை சோ்ந்த 27 வயதுடைய இளம்பெண், பள்ளி மாணவி என அடுத்தடுத்து பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். தங்களுடன் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக அந்த புகாரில் இளம்பெண்கள் கூறியிருந்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகாரும் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த புகார்கள் தொடர்பாக காசி மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த வகையில் அவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி காசியின் நண்பர் ஒருவரை கைது செய்தனர். மேலும் காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக காசியின் தந்தை தங்க பாண்டியனையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசியின் நண்பரான அஞ்சுகிராமத்தை சேர்ந்த கவுதம் (வயது 29) என்பவரும் சேர்க்கப்பட்டு இருந்தார். எனவே அவரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் கவுதம் வெளிநாட்டில் இருந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் கவுதம் நேற்று முன்தினம் குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வருவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்று கவுதமை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது காசியுடன் சேர்ந்து ஆபாச புகைப்படத்தை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கவுதம் அனுப்பி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்