கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை தாக்கி அ.தி.மு.க. வேட்பாளரை மர்மகும்பல் கடத்தல்

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் பங்கேற்க சென்றபோது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை தாக்கி அ.தி.மு.க. வேட்பாளரை மர்மகும்பல் கடத்தி சென்றது. இதையடுத்து தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதல், செருப்பு வீச்சு மத்தியில் தேர்தல் நடந்து முடிந்தது.

Update: 2022-12-19 19:28 GMT

துணைத்தலைவர் தேர்தல்

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அ.தி.மு.க.வும் தன்வசப்படுத்தி சம பலத்துடன் உள்ளன. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் உள்ளார். ஆனால் துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கான தேர்தல் சில காரணங்களால் 6 முறை தள்ளிவைக்கப்பட்டது.இந்தநிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்றும், நீதிபதிகள் மூலம் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.இதையடுத்து நேற்று மதியம் துணைத்தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்தில் நடைபெற இருந்தது. இதில் துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், பரமத்திவேலூர் மாவட்ட கவுன்சிலருமான திருவிகா போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தி.மு.க. சார்பில் தேன்மொழி என்பவர் போட்டியிட்டார்.

காரை மறித்த மர்மகும்பல்

இதற்கிடையே துணைத்தலைவர் தேர்தலையொட்டி திருவிகா உள்பட அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் 6 பேரும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் பகுதியில் வைக்கப்பட்டிருந்தனர்.இந்தநிலையில் தேர்தல் நாளான நேற்று திண்டுக்கல்லில் இருந்து மாவட்ட கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு காரில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 2 பெண் கவுன்சிலர்கள் உள்பட 6 பேர், டிரைவர் என மொத்தம் 8 பேர் வந்தனர். அவர்களது கார் மதியம் 12 மணி அளவில் வேடசந்தூர் அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் அய்யனார் நகர் மேம்பாலம் பகுதியில் வந்தது. அப்போது திடீரென்று எதிரே 4 கார்களில் வந்த 20 பேர் கொண்ட மர்மகும்பல் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை வழிமறித்தது.பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தங்களது கார்களில் இருந்து இறங்கி, முன்னாள் அமைச்சரின் காரை நான்கு திசைகளிலும் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கும்பல் சாலையில் திராவக பாட்டில்களை போட்டு உடைத்தனர். இதனை பார்த்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கவுன்சிலர்கள் அச்சமடைந்தனர்.

வேட்பாளர் கடத்தல்

இதற்கிடையே அந்த கும்பலை சேர்ந்த 2 பேர், திடீரென்று எம்.ஆர்.விஜயபாஸ்கரின் காரை உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கினர். இதில், காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் காரில் வந்த துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் திருவிகாவை காரில் இருந்து வெளியே பிடித்து இழுத்தனர். பின்னர் அவரது தலையில் துணியை போட்டு மூடி, அவரை அந்த கும்பல் தங்களது கார்களில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். ஒருசில நிமிடங்களில் இந்த சம்பவம் அங்கு அரங்கேறியது.இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேடசந்தூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வேடசந்தூர் நகர செயலாளர் பாபுசேட் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். இதனால் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு சந்திரன், வேடசந்தூர் துணை சூப்பிரண்டு துர்காதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் உடன் வந்த மாவட்ட கவுன்சிலர்களிடம் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட கவுன்சிலரை கடத்திய கும்பல் குறித்து போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தள்ளுமுள்ளு - வாக்குவாதம்

இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்தலை நடத்த கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பின்புறம் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டரங்குகளில் நேற்று அதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலையில் இருந்தே கலெக்டர் அலுவலகத்தை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இந்தநிலையில் மதியம் 1 மணியில் இருந்தே கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் குவிய தொடங்கினர். இதனால் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கேட்டில் ேபாலீசாா் தடுப்பு அமைத்து நின்றனர். அப்போது தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாட்டில்கள், செருப்புகள் வீச்சு

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்ேபாது 2 தரப்பினரும் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து கேட்டை திறக்க வலியுறுத்தி கூச்சலிட்டனர்.இதனால் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் பாட்டில் மற்றும் செருப்புகளை மாறி, மாறி வீசி கொண்டனர்.

கார் கண்ணாடி சேதம்

இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, தி.மு.க., அ.தி.மு.க. என இருதரப்பினரையும் தனித்தனியாக போலீசார் கயிறு மூலம் வளையத்திற்கு தடுத்து நிறுத்தி வைத்தனர். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்களிக்க மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்திற்கு செல்வதற்காக காரில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்குள் நுழைந்தனர்.அப்போது கூட்ட நெரிசலில் அவர்களது கார் கண்ணாடி லேசாக உடைந்தது. இதனையடுத்து ேபாலீசார் அ.தி.மு.க. கவுன்சிலர்களை மாற்றுப்பாதையில் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

தேர்தல் நடந்து முடிந்தது

இதனையடுத்து மதியம் 2.30 மணி அளவில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் மற்றும் அதிகாரிகள் ேதர்தல் நடத்தும் அறைக்கு வந்தனர். அவர்களை தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் அடுத்தடுத்து தேர்தல் அறைக்கு வந்தனர். பின்னர் தேர்தல் நடந்தது.இதையடுத்து மதியம் 3.30 மணிக்கு தேர்தல் முடிந்து, கலெக்டர் பிரபுசங்கர் வெளியே வந்தார். அப்போது அவர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்களிக்க 11 கவுன்சிலர்கள் வந்து இருந்தனர். தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்ட முழு விவரங்கள் சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.

11 வாக்குகள் பதிவு

பின்னர் வெளியே வந்த தி.மு.க. கவுன்சிலர் தேன்மொழி கூறுகையில், ேதர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் தி.மு.க. சார்பில் 5-வது வார்டு கவுன்சிலர் ஆகிய நான் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். அதில் எனக்கு 7 வாக்குகளும், அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலருக்கு 4 வாக்குகளும் கிடைத்துள்ளது, என்றார். இதையடுத்து கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு திரண்டு இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் கரூர் ஒன்றியக்குழு. கவுன்சிலர் தமிழ்செல்வம் மற்றும் அ.தி.மு.க. வக்கீல்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் திருவிகா என்பவரை கடத்தி சென்று விட்டனர். அவர் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். அதனால் தற்போது தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.

முன்னாள் அமைச்சரின் காரை வழிமறித்து தாக்கி, அவரது கண்முன் அ.தி.மு.க. வேட்பாளரை கடத்தியதும், கரூரில் தேர்தலின்போது தி.மு.க.-அ.தி.மு.க.வினரிடையே மோதல், செருப்பு, பாட்டிகள் வீச்சு சம்பவங்கள் நடந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்