கரூர் அமராவதி ஆறு தண்ணீர் இன்றி வறண்டது
அணையில் இருந்து மிக குறைந்த அளவில் திறந்து விடுவதால் கரூர் அமராவதி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.;
அமராவதி ஆறு
கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவைகளையும், குடிநீர் தேவைகளையும் அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது. பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலை மலை தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு.
திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது.
வறண்டு காணப்படுகிறது
அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை. வடகிழக்கு பருவமழை காலங்களில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும். அப்போது கரூர் அமராவதி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும்-. அதைப்பார்ப்பதற்கு ரம்மியாக காட்சி அளிக்கும்.
கடந்த வடகிழக்கு பருவமழையின் போது கரூர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் சென்றது. ஆனால் தற்போது அமராவதி அணையில் இருந்து மிக குறைந்த அளவிலான தண்ணீர் ஆற்றிற்கு திறந்து விடப்படுவதால் கரூர் அமராவதி ஆற்றிற்கு தண்ணீர் வருவதற்கு வாய்ப்புகள் குறைந்து உள்ளது. இதனால் கரூர் அமராவதி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.