கருப்பட்டி விலை குறைந்ததால் தொழிலாளர்கள் ஏமாற்றம்

சாயல்குடி அருகே பல கிராமங்களில் பனைமர தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் கருப்பட்டியின் விலை குறைந்து உள்ளதால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-07-20 13:39 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே பல கிராமங்களில் பனைமர தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் கருப்பட்டியின் விலை குறைந்து உள்ளதால் தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

பனை மரம்

பனை மரத்தில் இருந்து பதநீர், நுங்கு, பனங்காய், பனம்பழம் போன்ற உணவுப் பொருட்களும் பனை மட்டை, நார், பனை ஓலை, பனஞ்சட்டம் உள்ளிட்ட கட்டுமான பொருட்களும் கிடைக்கின்றன. அதிலும் பதநீரில் இருந்து காய்ச்சப்படும் கருப்பட்டி சுவை, மணம் சொல்ல முடியாதது. அதுபோல் மருத்துவ குணங்களும் ஏராளம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. குறிப்பாக சாயல்குடி அருகே நரிப்பையூர், கன்னி ராஜபுரம், பூ பாண்டியபுரம், கடுகு சந்தை, சத்திரம், மேல செல்வனூர், கீழக்கிடாரம், மேல கிடாரம், மூக்கையூர், வெட்டுக்காடு, மாரியூர் உள்ளிட்ட 100-க்கணக்கான கிராமங் களில் பனைத் தொழிலை நம்பி மட்டும் சுமார் 10,000-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன.

ஏமாற்றம்

இதில் பனைமர தொழிலாளர்கள் பதநீர் சேகரிப்பு மற்றும் கருப்பட்டி தொழிலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சத்திரம், மேல செல்வனூர், கடுகு சந்தை, கன்னிராஜபுரம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் பனைமர தொழிலாளர்களால் காய்ச்சப்படும் கருப்பட்டியின் விலை குறைந்து உள்ளதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இதுபற்றி மேலச்செல்வனூர் பகுதியில் வசித்து வரும் கருப்பட்டி வியாபாரம் செய்து வரும் ஜான்சிராணி என்ற பெண் தொழிலாளி கூறியதாவது:- பனைமர தொழிலை நம்பி வெட்டுக்காடு, கன்னிராஜபுரம், கடுகு சந்தை, சத்திரம், மேலச்செல்வனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கருப்பட்டி சீசன் நடந்து வருகின்றது.

விலை நிர்ணயம்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கருப்பட்டி விலை மிக மிக குறைந்து உள்ளதால் மிகுந்த ஒரு ஏமாற்றம் தான். பதநீரை பெரிய பாத்திரத்தில் ஊற்றி கஷ்டப்பட்டு காய்ச்சி கருப்பட்டியாக்கி உற்பத்தி செய்து வருகிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் கருப்பட்டிக்குகூட எங்களால் ஒரு நல்ல விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை.

உற்பத்தி செய்யும் கருப்பட்டிக்கு வியாபாரிகள் தான் விலை நிர்ணயம் செய்து பெற்று செல்கின்றனர். வியாபாரிகள் நிர்ணயம் செய்யும் நிலைக்கே கருப்பட்டியை கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ. 200 வரையிலும் எங்களிடம் பெற்றுச் சென்ற கருப்பட்டி விலை தற்போது இந்த ஆண்டு ஒரு கிலோ ரூ. 140 மட்டுமே விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் பெற்று செல்கின்றனர்.

ஏமாற்றம்

இது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான். நாங்கள் உற்பத்தி செய்யும் கருப்பட்டிக்கு அரசே ஒரு நல்ல விலை நிர்ணயம் செய்தால் எங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். கருப்பட்டி காய்ச்சி உற்பத்தி செய்யும் தொழிலாளர் களுக்கு அரசு மூலம் எந்த ஒரு சலுகையும் கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்