கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம்
குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோட்டம்
குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாம சுந்தரி உடனுறை கருப்புலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறும் தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் கருப்புலீஸ்வரர், சிவகாமசுந்தரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து தேரில் எழுந்தருளிக்கப்பட்டது.
தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. தேரோட்டத்தை அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ரோட்டரி ஆளுநர் ஜே.கே.என்.பழனி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ஜி.எஸ். அரசு, நவீன்சங்கர், தேர் கமிட்டி தலைவர் எம்.எஸ். அமர்நாத், கவுரவ தலைவர் வி.பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள்
நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் மாவிளக்கு கொண்டுவந்து தீபாராதனை செய்தனர். மிளகு மற்றும் உப்பை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் அன்னதானமும், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குடியாத்தம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி தலைமையில் மின் பணியாளர்கள் வழிநெடுகிலும் தேர் செல்லும் பாதைகளில் உள்ள மின்சார கம்பிகளை துண்டித்து தேர் செல்ல வழிவகை செய்து கொடுத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, ஆய்வாளர் பாரி உள்பட தேர் கமிட்டியினர், இளைஞர் அணியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.