எஸ்.புதூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்பு

எஸ்.புதூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், லியோனி கலந்து கொண்டனர்.

Update: 2023-08-13 19:00 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், லியோனி கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம்

எஸ்.புதூர் மந்தையம்மன் திடலில் தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழ்நாடு பாடநூல் வாரிய தலைவர் லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் எஸ்.புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த தி.மு.க. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பட்டிமன்றம்

விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசும் போது, கருணாநிதி கடந்து வந்த அரசியல் பாதை, அதை பின்பற்றி சிறப்பாக செயலாற்றும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குறித்தும், குடும்ப பெண்கள் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமைத்தொகை மாதம்தோறும் ரூ.1000 வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது என்றார்.

அதனைதொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் வாரிய தலைவர் பட்டிமன்ற நடுவர் லியோனி தலைமையில் கருணாநிதி தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம், சிறப்புகள், தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பட்டிமன்றம் நடைபெற்றது.

தள்ளுமுள்ளு

பொதுக்கூட்டம் முடிவில் அனைவருக்கும் எவர்சில்வர் பாத்திர பொருட்கள் வழங்குவதற்காக பொதுமக்களிடம் டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. டோக்கன் கொடுத்து எவர்சில்வர் பாத்திரம் வாங்கும்போது கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு நிர்வாகிகள், போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்